×

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் சத்தி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 நாட்கள் கனரக வாகனங்கள் செல்லத்தடை

சத்தியமங்கலம் :  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். விழாவின் முதல்  நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் திருவிழாவில் கலந்து கொள்வர் என்பதால் விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று பண்ணாரி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கோவில் துணை ஆணையர் மேனகா தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ, பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி, சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்பு துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து துறை, மருத்துவ துறை, சத்தியமங்கலம் நகராட்சி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொலைபேசித் துறை, உணவு பாதுகாப்பு துறை, மின்வாரியம், வனத்துறை, பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குண்டம் திருவிழாவின்போது ஏப்ரல் 3,  4 மற்றும் மறுபூஜை நடைபெறும் 10-ம்  தேதிகளில் அதிகப்படியான காவலர்களை பணியமர்த்துதல், போக்குவரத்து நெரிசல் இன்றி கண்காணித்தல் பணியில் ஈடுபடுவர். குண்டம் இறங்கும் பக்தர்கள் அம்மனை நேரடியாக தரிசனம் செய்யும் வசதி, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் தடையில்லாமல் விநியோகம் செய்தல் உறுதி செய்யப்படுகிறது.

கோயில் வளாகத்தில் அமைக்கப்படும் கடைகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்படுகிறதா? என தீயணைப்பு துறை கண்காணித்தல், போக்குவரத்து கழகம் சார்பில் ஏப்ரல் 3, 4 மற்றும் 10 ஆம் தேதிகளில் சாம்ராஜ் நகர், சத்தி, கோபி, ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி, தொட்டம்பாளையம், நம்பியூர், திருப்பூர், பங்களாபுதூர், கோவை, மேட்டுப்பாளையம், உதகை ஆகிய இடங்களில் இருந்து பண்ணாரிக்கு போதுமான எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

புதுக்குய்யனூர் பிரிவு, மற்றும் ராஜன்நகர் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களில் இருந்து கோயிலுக்கு செல்லும் அதிகமான அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்குதல், மைசூர் மற்றும் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து பால் ஏற்றி வரும் லாரிகள் காய்கறி லாரிகள் உள்ளிட்ட இதர கனரக வாகனங்கள் 3 ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து 4 ஆம் தேதி மாலை 3 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

 மருத்துவத்துறை சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் தலைமையில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருத்தல், சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சத்தி பேருந்து நிலையத்தில் பொது சுகாதார வசதி செய்தல், பண்ணாரி அம்மன் கோயிலுக்கு 50 குப்பைத்தொட்டிகள் வழங்கும்படி கேட்டுக் கொள்வது.

 சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கோவிலில் உள்ள சுகாதார பணியாளர்களுடன் மேலும் கூடுதலாக 50 சுகாதாரப் பணியாளர்களை நியமனம் செய்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சீருடையுடன் பணியில் ஈடுபட அறிவுறுத்தல் முடிவு செய்யப்பட்டது.பக்தர்களுக்கு கூடுதலாக தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்தல், தொலைபேசித்துறை சார்பில் திருவிழா சமயத்தில் தொலைபேசி கோபுரத்தின் அலைவரிசையை உயர்த்தி கொடுத்தல், உணவு பாதுகாப்பு துறை சார்பில் திருவிழா சமயத்தில் கோவில் வளாகத்தில் விநியோகம் செய்யப்படும் உணவுகளை தரமான உணவா என பரிசோதித்தல், மின்வாரியம் சார்பில் தடை இல்லாமல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

வனத்துறை சார்பில் பண்ணாரி - பவானிசாகர் சாலையில் வலது பக்கம் காலி இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க வழங்குதல், சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் குறித்து விளம்பர பலகைகள் தேவைப்படும் இடங்களில் வைத்தல், வனப்பகுதிக்குள் பக்தர்கள் செல்லாமல் கண்காணித்தல், வனத்திற்குள் பீடி, சிகரெட் துண்டுகளை பக்தர்கள் தூக்கி எறிந்து தீ விபத்து ஏற்படுத்தப்படாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் இருபுறமும் பக்தர்கள் எளிதாக நடந்து செல்ல மேடு பள்ளங்களை சரி செய்தல் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு துறைவாரியாக அடையாள அட்டை வழங்குதல், மற்றும்  பல்வேறு வசதிகள் செய்வது தொடர்பாக அந்தந்த துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. குண்டம் திருவிழாவிற்கு அனைத்து துறை அதிகாரிகளும் நலமுறையில் ஒத்துழைப்பை வழங்கி  சிறப்பாக விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.Tags : Pannari Amman Temple Gundam festival ,Satti-Mysore National Highway , Sathyamangalam: The famous Pannari Mariamman temple is located in the forest next to Sathyamangalam in Erode district.
× RELATED பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா;...