×

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு-கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை நேற்று கலெக்டர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலல வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் எஸ்எஸ்சி (எம்டிஎஸ்) போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை, நேற்று கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாட குறிப்புகள் அடங்கிய இலவச கையேட்டினை வழங்கி பேசினார்.

 அவர் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயில்பவர்களுக்கு ஏதுவாக, இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட ஒரு தேர்வுக்கு மட்டும் படிக்காமல், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து, தேர்வு எழுதினால் மட்டுமே, வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், மாணவர்கள் நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.

செய்தித்தாள்களில் தற்கால நாட்டு நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு தொடர்பான செய்திகளை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும்போது, அனைத்து பாடக்குறிப்புகளுக்கும் தனித்தனியாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும். தேர்வு மையங்களில் சொல்லித்தரும் பாடங்களை தவிர, நாம் தனியாக அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும். இங்கு அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இதுவரை 100க்கும் அதிகமானோர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள நூலகத்தில் போட்டி தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள், மாத இதழ்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்கான குறிப்பேடுகள் உள்ளது. இதனை மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அரசு தேர்வுக்கு படித்தாலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டே அரசு தேர்வுக்கு படிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுந்தரம், மோனிஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.


Tags : Collector ,District Employment Office , Krishnagiri: The Collector started a free training course for the competitive examination at the Krishnagiri District Employment Center yesterday.
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!