×

கூரம் ஊராட்சி மணல்மேடு இருளர் குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம்: மணல்மேடு இருளர் குடியிருப்பு பகுதியில், பொதுமக்கள் மற்றும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மின்சார வசதியில்லாமல் அவதிப்படுவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானநிலையில், அப்பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்ற ஆய்வு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம், கூரம் ஊராட்சியில் அமைந்துள்ள மணல்மேடு பழங்குடியின இருளர் குடியிருப்பு பகுதியில், மின்சார வசதி இல்லாமல், ராந்தல் விளக்கு ஒளியில் படிக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், அங்கு வசிக்கும் மக்கள் மின்சாரம் பெறுவதற்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியின் அறிவுரையின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா தலைமையில், மணல்மேடு பழங்குடியின இருளர் குடியிருப்பு பகுதியை வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் வட்டாட்சியர், ஊரக வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாகி அதிகாரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மக்களோடு பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, பத்து தினங்களுக்குள், முழுமை பெறாத அனைத்து வீடுகளும் கட்டித்தரப்படும் என்றும், வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில்  குழந்தைகள் மையம் அங்கன்வாடி அமைத்து தரப்படும். இருளர் மக்களுக்காக சுடுகாடு ஒதுக்கி சாலை அமைத்து தரப்படும். தொழில் செய்வதற்கு இடம் ஒதுக்கி தொழில் தொடங்க ஏற்பாடும் செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர்.

Tags : Sandalmedu Irular ,Cooram Panchayat , Officials inspect Sandalmedu Irular residential area of Cooram Panchayat
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...