×

திம்மராஜாம்பேட்டை ஊராட்சி கசக்குட்டையில் கலக்கும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாலாஜாபாத்: திம்மராஜாம்பேட்டை ஊராட்சியில் உள்ள கசக்குட்டையில் வீடுகளில் இருந்து நேரடியாக விடப்படும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்தில் உளள திம்மராஜாம்பேட்டையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பழமை வாய்ந்த கோயில்கள், பள்ளி, நூலகம், அங்கன்வாடி மையம், தபால் நிலையம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், திம்மராஜாம்பேட்டை கசக்குட்டையின் அருகாமையில் ஊராட்சிக்கு குடிநீர் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கூட்டு குடிநீர் திட்ட கிணறு உள்ளது. இந்த கிணறில் அருகாமையில் கசக்குட்டை உள்ளது. இந்த குட்டை இப்பகுதியில் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது, இந்த கசக்குட்டை முழுவதும் முற்புதர்கள் முளைத்து, மழைக்காலங்களில் மழைநீர் வருவதற்கு உண்டான கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. மேலும், இந்த குட்டையின் சுற்றியுள்ள வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் கழிவுநீர் மற்றும் வீட்டு உபயோக உபரிநீர்களை நேரடியாக பைப் மூலம் இந்த குட்டையில் தான் விடுகின்றனர்.

இதனால், குட்டை முழுவதும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகின்றது. குடிநீருக்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய இந்த குட்டை தற்போது சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையையொட்டி, கிராமத்தின் பழமையானது கசக்குட்டை உள்ளது. இந்த கசக்குட்டையில் மழைநீர் நிரம்பி விவசாய நிலங்களுக்கு செல்லும் கால்வாய்கள் உள்ளன. தற்போது, கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி மழைக்காலங்களில் இந்த குட்டை நிரம்பாமலே காட்சியளிக்கும்.

தற்போது, அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் தங்களின் வீட்டு கழிவு நீர்களை நேரடியாக பைப் மூலம் குளத்தில் விடுவதால், தற்போது இந்த கசக்குட்டை சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலை குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதுபோன்ற, சூழ்நிலையில் இன்று உலக தண்ணீர் தினமாக கொண்டாடும் நிலையில், நீர் ஆதாரமாக விளங்கும் குளம், குட்டைகளை சீரமைத்து கழிவுநீர்கள் கலக்காமல் நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் சுகாதாரமான குடிநீரை மக்கள் பருக பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர். இதுபோன்ற, சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியில் உள்ள கசக்குட்டையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Kasakutta , Sewage mixing in Kasakutta of Thimmarajampet Panchayat: Request to take action
× RELATED திம்மராஜாம்பேட்டையில் கசக்குட்டையை அதிகாரிகள் ஆய்வு