கோயில் நிலத்தில் மருத்துவமனை கட்டிடங்களை கட்டக் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்த மாதவன், சோனைமுத்து, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை தெற்கு தாலுகா சின்ன அனுப்பானடியில் 400 ஆண்டு பழமையான குருநாதசாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஊராட்சியும், அரசுத்துறையினரும் ஆக்கிரமித்துள்ளனர். கோயில் ஊரணிக்கான நிலத்தில் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் கட்டப்படுகிறது. ஏற்கனவே கோயில் நிலத்தில் விஏஓ அலுவலகம், ரேஷன் கடை, சத்துணவு மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தண்ணீர் தொட்டி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனை விரிவாக்கக் கட்டிடம் கட்டத் தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள், ‘‘கோயில் நிலத்தில் எப்படி மாநகராட்சி மருத்துவமனை கட்டிடம் கட்ட முடியும்? சிவில் வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு எதிராக செயல்படுவது ஏன்? கோயிலுக்கு சொந்தமான ஊரணி என வருவாய்த்துறை ஆவணத்தில் உள்ளதே?’’ என்றனர். அப்போது இருவரும், ‘‘கிராம ‘அ’ பதிவேட்டில் அரசு புறம்போக்கு நிலம் என உள்ளது’’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘சம்பந்தப்பட்ட சிவில் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உரிய மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறலாம். கீழமை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலத்தில் மருத்துவமனை கட்டிடம் கட்டக் கூடாது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: