
சென்னை: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் அருகே குண்டலப் புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது; அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது; ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமானது என அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அத்துடன் ஆசிரமத்தில் இருந்து 140 பேர் மீட்கப்பட்டு பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கில் ஆசிரம நிர்வாகிகள் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 7 பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அனைத்து உரிமங்களும், சான்றுகளும் பெற்று 25 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி வரும் தங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.