டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் மூலம் இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கான பணம் புழங்குகிறது. சாமானியவர்கள் முதல் படித்தவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு ஏராளமானோர் அடிமையாகியுள்ளனர். ரம்மி விளையாட்டு பொழுது போக்கிற்காக இருந்தவரை பிரச்னையில்லை. ஆனால் அது எப்போது பணம் வைத்தும் விளையாடும் சூதாட்டமானதோ, அப்போதிலிருந்து தான் பிரச்னை தொடங்குகிறது.
பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் 34-வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7-வது அட்டவணை, 34-வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டங்களை மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளது. திறமை, அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கு வேறுபாடுகள் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட விளையாட்டுக்கு திறன் வகுக்கப்பட்டுள்ளது என்றால் அது திறன் விளையாட்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளை சூதாட்டம் என்றே இந்திய சட்டங்கள் வரையறுத்துள்ளது.
எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏராளமானோர் பணம் கட்டி ஆன்லைனில் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். முதலில் ஜெயிப்பது போல் தெரிந்தாலும், கடைசியில் கணக்குப் பார்த்தால் நாம் வென்றதற்கும் மேல் தோற்றிருப்போம். ஆனால் விட்டதை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்கிற வெறி தலைக்கேற, கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைத்தும் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதனால் நிம்மதியை இழந்து, குடும்பத்துடன் பலர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம். ஆன்லைன் சூதாட்டத்தால தமிழகத்தில் 17-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.