கூடலூர் வீட்டு வசதி வாரிய கட்டிட கைப்பிடிச் சுவர் இடிந்து சேதம்

கூடலூர் : கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் பழைய கட்டிடத்தின் மாடி கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 144 குடியிருப்புகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான இந்த  குடியிருப்புகளில் பெரும்பாலான குடியிருப்புகள் ஆபத்தான நிலையில் உள்ளதால் குறைந்த அளவிலான குடியிருப்புகளிலேயே அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிக மோசமான நிலையில் இருந்த 80 வீடுகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.    

  இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் பெரும் சத்தத்துடன்  குடியிருப்பில் உள்ள கட்டிடம் ஒன்றின் மாடியில் உள்ள கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் ஒரு பகுதியில்  சில குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். மக்கள் நடமாடும் நேரமாக இருந்தும் இப் பகுதியில் யாரும் நடமாடாத காரணத்தால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சில வாகனங்களும் சேதம் இன்றி தப்பி உள்ளன.

    முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பல குடும்பங்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகளும் தொடர்ந்து தேதமடைந்து வருகின்றன. புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் பணிகளும் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்தவர்கள் வெளியில் நடமாடி இருந்தால் ஆபத்து ஏற்பட்டு இருக்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தும் இதுவரை யாரும் சம்பவ இடத்தை பார்வையிட வரவில்லை. சம்பந்தப்பட்ட துறையினரின் அலட்சியப்போக்கே கட்டிடங்கள் சேதம் அடைவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: