கோடைவெயில் துவங்கிய நிலையில் விழுப்புரம், தியாகதுருகத்தில் ஆலங்கட்டி மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவைவிட அதிகளவு கொட்டி தீர்த்தது. இதனால் தென்பெண்ணை, மலட்டாறுகளில் கடந்த சில மாதங்களாகவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் கடுமையான வெப்பம் ஏற்படும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. தற்போது அதிகபட்சம் 90 முதல் 98 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் புழுக்கத்தால் தவித்த மக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் தவித்தனர்.

இதனிடையே விழுப்புரம் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும், திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதும் இடி, மின்னலுடன் காற்றுகள் வீசுவதுமாக இருந்தது. கடந்த 2 நாட்களாக இந்த நிலை நீடித்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கருமேகங்கள் கூடி மழை பெய்ய துவங்கியது. சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்யத் துவங்கியது.

யாரும் எதிர்பாராத நிலையில் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருசக்கரவாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்துவிட்டு ஆங்காங்கே ஒதுங்கினர். சுமார் அரை மணி நேரமாக ஆலங்கட்டி மழை பெய்ததை பொதுமக்கள் கையில் பிடித்து ஐஸ்கட்டியை வைத்து விளையாடியும் மகிழ்ந்தனர். கோடை காலம் துவங்கிய நிலையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த இரண்டு தினங்களாக வானில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென்று குளிர்ந்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. வட தொரசலூர், கலையநல்லூர், மாடூர்  ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரும் ஆலங்கட்டி மழையை கண்டு களித்து ரசித்ததுடன் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

Related Stories: