×

செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணியின் கை, கால் துண்டானது: பேசின்பிரிட்ஜ் பகுதியில் பரிதாபம்

தண்டையார்பேட்டை: பேசின்பிரிட்ஜ் பகுதியில் செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை, கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் சிக்னலுக்காக மெதுவாக செல்லும்போது, தண்டவாளத்தில் நிற்கும் வழிப்பறி ெகாள்ளையர்கள், ரயிலின் படிக்கட்டு பகுதியில் நின்று செல்லும் பயணிகளின் செல்போன்களை பறித்து செல்வது தொடர் கதையாக உள்ளது. இதில், பல பயணிகள் கீழே தவறி விழுந்து படுகாயமடைகின்றனர்.

அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 22ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலின் எஸ்4 பெட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோனி (24) மற்றும் அவரது உறவினர் அசரப் ஷெக் (24) ஆகிய இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் ரயில் படிக்கட்டுக்கு அருகே அமர்ந்து வந்துள்ளனர். ரயில், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே வந்த போது, ரோனி தனது செல்போனில் படம் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது, தண்டவாளத்துக்கு அருகே கீழே நின்ற வாலிபர், திடீரென ரோனியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது செல்போன் கீழே விழுந்துள்ளது. ரோனியும் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, செல்போன் பறித்த கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் ரயில்வே காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (எ) கரா (19) மற்றும் விஜய் என்கிற வெள்ளை (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீண்டும் அதேபோல் நடந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில், பயணி ஒருவரின் கை, கால்கள் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அடுத்த வாணியம்பாடியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (40). இவர் செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவர், கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலை ரிச் தெரு வந்துள்ளார். அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு அவரது நண்பருடன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடிக்கு புறப்பட்டார்.

பேசின் பிரிட்ஜை கடந்து ரயில் மெதுவாக சென்றபோது, ரயிலில் இருந்த ஒரு சிறுவன், படிக்கட்டு அருகே நின்றிருந்த அப்துல்கரீமின் செல்போனை பறித்துக்கொண்டு, ரயிலில் இருந்து குதித்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான். இதில் நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் அப்துல் கரீமின் இடது கை துண்டானது. மேலும் இடது காலின் கணுக்காலுக்கு கீழ் உள்ள பாதமும் துண்டானது. இதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். தகவலறிந்த வந்த ரயில்வே போலீசார், படுகாயமடைந்த அப்துல் கரீமை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்துல் கரீமுக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுவனை, சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர். அதில் செல்போன் சிறுவன், ஒரு ஆட்டோவில் ஏறி பாரிமுனைக்குச் சென்று திருட்டு செல்போன் வாங்கும் நபரிடம் ரூ.1,700க்கு செல்போனை விற்று, அதில் கிடைத்த பணத்தில் 2 பீர் குடித்துவிட்டு, ஆட்டோவுக்கு ரூ.500 கொடுத்ததுபோக, மீதி பணத்துடன் சுற்றித் திரிந்தபோது பிடிபட்டது தெரிந்தது. அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் பேசின்பிரிட்ஜ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Basinbridge , Boy snatches mobile phone, falls from moving train, suffers severed arm, leg: Misery in Basinbridge
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது