×

பட்டியலின பெண்ணை காதலித்து உறவு வைத்து ஏமாற்றிய வழக்கு சிறை நன்னடத்தை அதிகாரி பெற்றோருக்கு ஆயுள் சிறை: வன்கொடுமை தடுப்பு பிரிவில் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து மோசடி செய்த வழக்கில் சிறை நன்னடத்தை அதிகாரி மற்றும் அவரது பெற்றோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குரூப் 1 தேர்வு பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் திருச்சியை சேர்ந்த சத்தியமூர்த்தியும், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண்ணும் நண்பர்களாக பழகினர். அந்த பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இருவரும் காதலித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதை தொடர்ந்து திருமணம் செய்துகொள்வதாக கூறிய சத்தியமூர்த்தி பலமுறை அந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்தி சைதாப்பேட்டை சிறை நன்னடத்தை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், தங்கையின் திருமணம், பெற்றோர் சம்மதம இன்மை போன்ற காரணங்களை கூறி அந்த பெண்ணை திருமணம் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். பின்னர் அவருக்கு உறவுக்கார பெண்ணுடன் நிச்சயமானது. இதைக்கேட்டு  அதிர்ச்சியடைந்த பெண் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, சத்தியமூர்த்தியின் பெற்றோரிடம் அந்த பெண்ணின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தியின் பெற்றோர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சாதி பெயரை சொல்லி அந்த பெண்ணையும், அவரது தாயையும் திட்டியதோடு, மகன் ஏமாற்றியதற்காக பணம் கொடுப்பதாக கூறி மிரட்டியுள்ளனர்.
 
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை-குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி சாட்சியங்களிடம் விசாரித்து சான்றாவணங்களையும், எழுத்துப்பூர்வ வாதங்களையும் தாக்கல் செய்தார்.
 
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறை நன்னடத்தை அதிகாரி சத்தியமூர்த்தி, அவரது தந்தை ரெங்கு, தாய் சாரதா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சத்தியமூர்த்திக்கும் அவரது தந்தை, தாய்க்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனையும், பாலியல் வன்கொடுமை பிரிவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், நம்பிக்கை துரோகத்திற்கு ஒரு ஆண்டு சிறையும், தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
சத்தியமூர்த்திக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெற்றோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.



Tags : Prison ,Prevention of Violence Division , Prison Probation Officer parents sentenced to life imprisonment for cheating by falling in love with a listed woman: Sessions court verdict in the Prevention of Violence Division
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...