புதுச்சேரி அரசை கண்டித்து குடிநீர் தொட்டிக்கு மேல் ஏறி வவுச்சர் ஊழியர்கள் போராட்டம்: கல்வீச்சு- போலீஸ் தடியடி

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய  வலியுறுத்தி குடிநீர் தொட்டி மேல் ஏறி போராட்டம் நடத்தினர். புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில்  பணிபுரியும் 1311 வவுச்சர் ஊழியர்களை பல்நோக்கு பணியாளர்களாக பணிநிரந்தரம் செய்ய கோரி அரசு பணியாளர் கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று ஊர்வலமாக சட்டசபையை முற்றுகையிட வந்தனர். தகவலறிந்த பெரியகடை போலீசார், அவர்களை தடுத்து  நிறுத்தினர். அப்போது முதல்வர் ரங்கசாமி தொகுதியைச் சேர்ந்த 700 பேரை மட்டும் பணிநிரந்தரம் செய்ததை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிறகு போலீசார் குண்டு கட்டாக அவர்களை தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது ஊழியர்கள் சிலரது சட்டை கிழிந்து கீழே விழுந்ததில் ரத்தக் காயமும் ஏற்பட்டது. கறிக்குடோனில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டதும், அருகில் உள்ள உப்பளம் குடிநீர் தொட்டி மீது 100க்கும் மேற்பட்டோர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். கீழே நின்றிருந்த ஊழியர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போலீசார், ஊழியர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முயற்சி செய்தனர். அப்போது பதிலுக்கு ஊழியர்களும் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கிடையில் அங்கு வந்த எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: