×

புதுக்கோட்டை அருகே சிறுபாடு கிராமத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு: தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

செய்துங்கநல்லூர்: புதுக்கோட்டை அருகே சிறுபாடு கிராமத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, அங்கு தொல்லியல் துறை களஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே குமாரகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுபாடு கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி வரலாற்று துறையின் முன்னாள் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆறுமுக மாசான சுடலை களஆய்வு மேற்கொண்டார்.

இந்த மலைக்கு அருகில் வெங்கலமணி அய்யனார் என்ற சாஸ்தா கோயில் உள்ளது. இம்மலையானது உப்பாற்று ஓடையின் தென்முனையில் அமைந்துள்ளது. இம்மலையில் செம்மண், சரள்மண் மற்றும் கற்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு அதிகமாக அள்ளப்பட்டுள்ளது. இதனால் இங்கு பல்வேறு முதுமக்கள் தாழிகள் சேதமடைந்தும், அழிக்கப்பட்டும் உள்ளது. ஆய்வாளர் தன்னுடைய ஆய்வில் சிவப்பு நிறத்தாலான முதுமக்கள் தாழிகள், கோப்பைகள், இரும்பு கழிவுகள், பாறையின் மீது உருகிய நிலையில் இரும்பின் கழிவுகள் இருப்பதை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து முனைவர் ஆறுமுக மாசான சுடலை கூறுகையில், ‘முதுமக்கள் தாழிகள் பெரும்பாலும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை. இதுவரை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலும் சிவப்பு நிறத்தாலான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இரும்பு உருக்காலை இருந்ததற்கான அடையாளமாக உருக்கிய இரும்பின் கழிவுகள் தனியாகவும், பாறைகளின் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. மேலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கோப்பைகள் கிடைத்துள்ளன. கோப்பைகள் பெரும்பாலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வாளர் பெட்னாரிக் என்பவரது ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.’ என்றார்.

இதுகுறித்து வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்று துறைத்தலைவர் முனைவர் தருமர் கூறுகையில், ‘தமிழகத்தில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலும் சிவப்பு நிறத்தாலான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஆகையால் இந்த அரிதான கருப்பு நிறத்தில் இருக்கும் முதுமக்கள் தாழியை பாதுகாக்க தொல்லியல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து முனைவர் சசிகலா கூறுகையில், ‘என்னுடைய வழிகாட்டுதலில் முனைவர் ஆறுமுக மாசான சுடலை இதற்கு முன்பு வரை மூன்று புதிய தொல்லியல் களங்களையும், பல்வேறு தொல்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளார். அவர் கண்டுபிடித்த இடங்களில் தொல்லியல் துறை தகுந்த ஆய்வு மேற்கொண்டு அகழாய்வு செய்து பல்வேறு புதிய வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்’ என்றார்.

Tags : Sirupadu village ,Pudukottai , Pudukottai, Sirupatu Village, Elderly Villages, Archeological Survey
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்