முன்னேற்றப் பாதையில் தமிழ்நாடு; நிதி நிலை அறிக்கை உறுதி செய்கிறது: வைகோ பாராட்டு

சென்னை: முன்னேற்றப் பாதையில் தமிழ்நாடு செல்வதை நிதி நிலை அறிக்கை உறுதி செய்கிறது என வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூக நீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய 4 அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டு நாட்டிற்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருவதை, 2023-2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதிஅமைச்சர் சுட்டிக் காட்டி இருக்கிறார். வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசைக்  காட்டிலும், நிதி பற்றாக்குறையை  குறைத்து இருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று ஆகும். மாநில அரசின் வரி வருவாய் 2020-21இல் 5.58 விழுக்காடு குறைந்தது; ஆனால்  கடந்த 2 ஆண்டில் 6.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாலமுத்து ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும். தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி, தமிழில் மென்பொருள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 500 கோடி ரூபாயில் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இதனால் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முனைந்து இருக்கிறார். எனவேதான் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கவும், இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது.

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29 விழுக்காடு அதிகரித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்றும், உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

54 அரசு தொழிற்பயிற்சி மையங்களை திறன்மிகு பயிற்சி நிலையங்களாக மாற்ற ரூ.2783 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும். பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ?10,500 கோடி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் விரிவாக்கப்படும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. வரும் காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்வதற்கும், கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் சென்னையில் 320 கோடி ரூபாய் செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும். அடையாறு, கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்.

அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்பன போன்றவை வரவேற்கத்தக்கவை ஆகும். கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும். கோவையில், ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் மாநிலத்தின் சமநிலை வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ரூ.410 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய  மாவட்டங்களில் அமையும் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள்  மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ரூ.800 கோடி செலவில் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான பாராட்டுக்குரிய முயற்சிகள் ஆகும். நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பத்திர பதிவுக் கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.24,476 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4,400 ஏக்கர் பரப்பளவு கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன, நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது; வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத் தக்கவை. ஈரோடு மாவட்டம்- அந்தியூர், கோபி வட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், மரக்காணத்தில் 25 கோடி ரூபாயில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடுவதை இந்த நிதி நிலை அறிக்கை உறுதி செய்து இருக்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: