வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் கண்டனம்

சியோல்: வடகொரியா நேற்று கிழக்கு கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  அமெரிக்கா  தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13ம் தேதி தொடங்கி, வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 14ம் தேதி வடகொரியா குறுகிய தூரம் சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல்பகுதியில் செலுத்தி சோதனை செய்தது.  இதனை தொடர்ந்து தென்கொரியா  ஜப்பான் இடையே கடந்த 16ம் தேதி உச்சி மாநாடு நடைபெற்றது. உச்சி மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பியாங்யாங் நகரின் சுனான் பகுதியில் உள்ள கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியில் செலுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: