கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில், வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் சுற்றுலா சென்ற கொள்ளையனை, கோவாவில் கைது செய்த போலீசார், அவனிடமிருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 15ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து, 50 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையனை தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார், கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி அடுத்த தண்டேகுப்பத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான சதீஷ்குமார்(25) என்பது தெரிந்தது. மேலும், கொள்ளையடித்த நகைகளுடன் அவர் கோவாவுக்கு சுற்றுலா சென்றது தெரிந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் கோவாவுக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த சதீஷ்குமாரை கைது செய்து, கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர், ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பவரது வீட்டில் 17.5 பவுன் நகைகள், பழையபேட்டை செல்வராஜ் நகரில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 பவுன்  நகைகள், காவேரிப்பட்டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 பவுன் நகைகள் என 30 பவுன் நகையை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். மேலும், கொள்ளையடித்த நகைகளை, தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகேயுள்ள வைப்பூர் கிராமத்தை சேர்ந்த விக்கி(எ) விக்ரம், அப்பு(எ) விமல் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், சதீஷ்குமார் மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி நகரம், தாலுகா, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை உள்ளிட்ட காவல் நிலையங்களில், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொள்ளை சம்பவங்களில் தனித்தே ஈடுபடுவது வழக்கமாக கொண்ட சதீஷ்குமார், அந்த நகைகளை விற்று, வைப்பூரில் உள்ள தனது நண்பர்களுக்கு செலவு செய்வதும், சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டவர் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: