பவானி நகராட்சி பகுதியில் பத்திர பதிவுகளுக்கான தடையை நீக்க அதிகாரிகளுடன் ஆலோசனை

பவானி: பவானி நகரப் பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக கருதப்படும் பகுதிகளில் பத்திரப்பதிவுகள் செய்ய தடை விதிக்கப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக சொத்துக்கள் விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, வருவாய் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை, பவானி நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன், பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அப்போது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு எந்த விதமான அடிப்படை முகாந்திரம் இல்லாமல் பத்திர பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. எனவே, வக்பு வாரியத்தின் உரிமையுள்ள சர்வே எண்களைத் தவிர, பிற பகுதிகளுக்கு பத்திரப் பதிவுகள் தடையின்றி நடைபெற உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதுகுறித்து, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினர். இந்நிலையில், பவானி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் பத்திரப்பதிவு தடை நீக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

வக்பு வாரியத்தின் கோவை சரக ஆய்வாளர் மன்சூர் அகமது மற்றும் வருவாய், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பவானி நகராட்சி பகுதியில் நில உரிமை தொடர்பான ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக பள்ளிவாசல் உட்பட 4 சொத்து இனங்கள் அடையாளம் காணப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே, பாக்கியுள்ள பகுதிகளில் தடை நீக்கம் குறித்து பதிவு துறைக்கு கடிதம் அனுப்பப்படும். அதன் பின்னர் பதிவுத்துறை உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும். கடந்த 3.6.1959-ல் நில அளவை செய்யப்பட்டு, பதிவுகள் செய்யப்பட்டது. சுமார் 63 வருடங்களுக்குப் பின்னர் தற்போது நில உரிமை தொடர்பான அளவீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படும் என கோவை சரக ஆய்வாளர் தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. பவானி நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன், அவைத் தலைவர் மாணிக்கராஜன், மாவட்டப் பிரதிநிதி நல்லசிவம், கவுன்சிலர்கள் மோகன்ராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் மோகன்ராஜ், சந்தோஷ்குமார், துரைராஜா, திலகவதி சரவணன், நில மீட்புக் குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் தலைவர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள், திமுக கிளைச் செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: