தேனி மேஜர் ஜெயந்த் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்: அமைச்சர்கள், பொதுமக்கள் அஞ்சலி

தேவதானப்பட்டி: அருணாச்சல் பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ மேஜர் ஜெயந்த் உடல், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே, ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்-மல்லிகா தம்பதியின் ஒரே மகன் ஜெயந்த்(35). அருணாச்சல் பிரதேசத்தில் ராணுவ மேஜராக பணியாற்றி வந்தார். கடந்த 16ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஜெயந்த் மற்றும் சக அதிகாரி லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். மேஜர் ஜெயந்த் உடல்  நேற்று அதிகாலை 12.20 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது.

மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு சூலூர் 35வது துப்பாக்கி படை பிரிவு மேஜர் சேகர்பாணி கிரேகி தலைமையில் 21 ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். அரசு சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சிங் சித், எஸ்பி சிவபிரசாத் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். நள்ளிரவு நேரம் என்பதால் விமான நிலையத்தில் இருந்து மேஜர் ஜெயந்த் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து நேற்று காலை 7 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு கர்னல் சந்தீப் மேனன் தலைமையில் உடல் பெற்றுக் கொள்ளப்பட்டது.  அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை  மேஜர் ஜெயந்த்தின் மனைவி செல்லா சாரதிஸ்ரீயிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். பின்னர் ஜெயமங்கலம் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்த் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு தந்தை ஆறுமுகம் பிள்ளை தீ மூட்டினார். ஜெயமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களும்  அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: