கலை, அறிவியல் கல்லூரிகளில் 75 மதிப்பெண்ணிற்கு செமஸ்டர் தேர்வு: மாநில உயர்கல்வி கவுன்சில் தகவல்

சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு 75 மதிப்பெண்ணிற்கு நடத்த மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு 60 மதிப்பெண்களுக்கும், உள்மதிப்பீடு தேர்வு 40 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. தன்னாட்சி கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டிற்கு 50:50, 60:40 என்று வெவ்வேறு வெயிட்டேஜ் உள்ளன. அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒரே மதிப்பெண் முறையை கொண்டு வரும் வகையில் செமஸ்டர் தேர்வு 75 மதிப்பெண்ணிற்கும் உள்மதிப்பீடு 25 மதிப்பெண்ணிற்கும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.  

அதன்படி, அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் மற்றும் 127 இளங்கலை முதுகலை பாடத்திட்டங்களுக்கான மாதிரி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது மதிப்பீட்டிற்கான இந்த பொதுவான வெயிட்டேஜ் பற்றி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்பட உள்ளன. இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் மற்றும் இணைப்பு சார்பற்ற கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பீட்டில் இது சீரான தன்மையை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: