×

காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில்தான் தமிழ்நாட்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

சென்னை: மாநில உயர்கல்வி மன்ற சட்ட விதிகளை பின்பற்றி, காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில்தான் பாடதிட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சென்னையில் இருந்து 22 கல்லூரிகள் மதுரை, கோவை, திருச்சி உள்பட சில மாவட்டங்களில் இருந்து சுமார் 90க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பின்னர் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதில் உள்ள நல்ல கருத்துகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நம்முடைய கல்வி முறையான 10+2+3 என்பதில் உறுதியாக இருக்கிறோம். தன்னாட்சி கல்லூரிகள் பிரதிநிதிகள் பொது பாடத்திட்டத்தில் உள்ள பிரச்னைகளை கூறினர். எனினும் மாதிரி பாடத்திட்டத்தை வரவேற்றனர். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு 90 சதவீதம் கல்வி நிறுவனங்களில் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. மற்றவர்கள் அடுத்தாண்டு முதல் அமல்படுத்த இருக்கிறார்கள். மாதிரி பாடத்திட்டம் சர்வதேச அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. எல்லா பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட், கல்வி கவுன்சில், பாட வாரியம் ஏற்று கொண்டு இருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதில் உயர்கல்வித் துறைக்கு அதிகாரம் இருக்கிறது என்று 1992ம் ஆண்டில் அரசாணை போடப்பட்டு உள்ளது. 900 கல்வியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்திதான் பாடத்திட்டத்தை கொண்டு வந்தோம்.

ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து மற்றொரு பல்கலைக்கழகத்துக்கு படிக்க செல்லும் மாணவர்கள், அதேபோல் பணிபுரிய செல்லும் பேராசிரியர்களுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில்தான் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி பாடத்திட்டத்தில் 75 சதவீதம் பாடத்தைதான் அமல்படுத்த சொல்லியுள்ளோம். 25 சதவீதம் அவர்களாகவே முடிவுசெய்து கொள்ளலாம். பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் உரிமை தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும். ஜனநாயக மரபுப்படியே பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த சொல்லியுள்ளோம். யாரையும் நிர்பந்திக்கவில்லை. பட்டமளிப்பு விழா பற்றிய கேள்வி என்னிடம் கேட்பதைவிட சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பதுதான் சரியாக இருக்கும். ‘ஸ்லெட்’ தேர்வு 5 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு ஸ்லெட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில்தான் தமிழ்நாட்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,State Council of Higher Education ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...