மனைவியிடம் ஏற்பட்ட சண்டையில் போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து ‘அட்ராசிட்டி’: டெல்லியில் வாலிபர் கைது

புதுடெல்லி: மனைவியிடம் ஏற்பட்ட சண்டையில் போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு அட்ராசிட்டி செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியின் ஷாதாரா பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு போலீஸ்காரர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு, ஜீப்பின் அருகே நின்றிருந்த மற்ற போலீசார் மற்றும் மக்கள் கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்கினார். பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். போலீசாரும் தப்பி ஓடினர்.

தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் போலீஸ் துப்பாக்கியை பறித்த குற்றவாளியை ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘போலீஸ் துப்பாக்கியை பறித்த குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் கிருஷ்ணா செர்வால்; தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் ஓடிய அவரை பிடிக்க முயன்றனர்.

அதனால் அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு, அங்கு கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்கினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். மேற்கண்ட சம்பவத்தின் அனைத்து காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: