×

ஏற்காடு மலைகிராமத்தில் ₹5.50 கோடியில் புதிய தார் சாலை

* பொதுமக்களின் 25ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

* பல கிலோ மீட்டர் சுற்றி செல்வதற்கு நிரந்தர தீர்வு

சேலம் : ஏற்காடு மலைக்கிராமத்தில், பொதுமக்களின் 25 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ₹5.50 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஏற்காடு ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளின் கீழ், சுமார் 60க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

இங்கு வசித்து வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்குள்ள எஸ்டேட்டுகளிலும், சேலம் மற்றும் வெளியூர்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்காட்டில் உள்ள பல்வேறு மலைக்கிராமங்களை இணைக்க, ஊராட்சி சாலைகள் உள்ளன. அதே நேரத்தில், ஒருசில பகுதிகளுக்கு விரிவான சாலை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. குறிப்பாக, தனியாரின் நிலத்தில் சாலை அமைக்க வேண்டி இருந்ததால், பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, ஏற்காட்டை அடுத்த பெலாக்காட்டிற்கு அருகேயுள்ள மாரமங்கலம், கேளையூர்,  செந்திட்டு, அரங்கம், சின்னமதூர், மதூர், பெலாக்காடு, கே.நார்த்தஞ்சேடு  மற்றும் தும்பிப்பாடி கிராமங்களில் சுமார் 4,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து  வருகின்றனர். ஏற்காடு முதல் கொட்டச்சேடு வரை செல்லும் சாலையில்  ஆத்துப்பாலம் என்னும் இடத்தில் இருந்து கூட்டுமுட்டல், மாரமங்கலம்,  கேளையூர், பெலாக்காடு, மதூர், அரங்கம், செந்திட்டு, நார்த்தஞ்சேடு,  தும்பிப்பாடி வரை மட்டுமே தார்சாலை வசதி உள்ளது.

 அதற்கு மேல் சரியான சாலை  வசதிகள் கிடையாது. இக்கிராம மக்கள் கொட்டச்சேடு மற்றும் ஏற்காடு செல்ல வேண்டும் என்றால் 28 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் வழியாக சாலை அமைத்தால், மூன்றே கிலோ மீட்டர் தொலைவில் கொட்டச்சேடு செல்ல முடியும். எனவே, அவ்வழியாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

சமீபத்தில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடமும் மனு அளித்தனர். இதனையடுத்து ஏற்காட்டிற்கு சென்ற கலெக்டர் கார்மேகம், சாலை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். புதிய தார்சாலை பீட் எண் 6 மற்றும் பீட் எண் 7 வழியாக அமைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. இதில், பீட் எண் 6 வழியில் உள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர், நிலம் வழங்க மறுத்தததுடன், நீதிமன்றத்திற்கு சென்றனர். ஆனால் மற்றொரு வழியான பீட் எண் 7-ல் உள்ள தனியார் எஸ்டேட் மற்றும் பொதுமக்கள் சாலை அமைக்க நிலம் வழங்க முன்வந்தனர்.

இதனையடுத்து முதற்கட்டமாக, அந்த வழித்தடத்தில் ₹5.50 கோடி மதிப்பில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மலைக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அங்கு பீட் எண் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு வழித்தடங்கள் பரிந்துரை  செய்யப்பட்டன.

இதில், பீட் எண் 7-ல் சாலை அமைக்க தனியார் எஸ்டேட்  உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். மேலும், 9 தனியார் பட்டாதாரர்கள்  தங்களது 0.9 கி.மீ தொலைவிலான நிலங்களை சாலை அமைக்க, தானமாக ஏற்காடு வட்டார  வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கியுள்ளனர். அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது பீட் எண் 7 வழியாக, ₹5.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்படவுள்ளது. மலைவாழ் மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,’’ என்றார்.

சேலம் எஸ்பி நேரில் ஆய்வு

இதனிடையே, இந்த புதிய தார்சாலையை பீட் எண் 6 வழியாக அமைக்க வேண்டும், தற்போது அமைக்கப்படவுள்ள புதிய சாலையின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று சாலைப் பணியை தொடங்குவதற்கு முன்பாக, ஏடிஎஸ்பி கென்னடி, சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி ஆகியோரது தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார், நேரில் சென்று புதிய தார் சாலை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : New Tarred Road ,Yercaud Hill Village , Salem : Construction of a new darsala at a cost of ₹5.50 crore is underway in Yercaud hill village to fulfill the 25-year demand of the public.
× RELATED ஆதி திராவிடர் நலத்துறை அரசு...