×

வேலூர் அடுத்த கீழ்மொணவூர் சென்னை- பெங்களூரு சர்வீஸ் சாலையில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்-நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர் : வேலூரில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாவதால் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாநகர எல்லை தொடங்கும் புதுவசூர் தொடங்கி கீழ்மொணவூர் வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையோரம் உள்ள காலியிடம் பொதுவாக குப்பைகள் கொட்டும் இடமாகவே காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக சேண்பாக்கத்தை ஒட்டி நெடுஞ்சாலையின் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் உள்ள கனரக வாகன பணிமனைகளில் சேரும் கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. அதேபோல் சர்வீஸ் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய்களின் மேல் மூடப்பட்டுள்ள சிலாப்புகள் உடைக்கப்பட்டும் கால்வாய்கள் தூர்ந்தும் போயுள்ளன.

இது ஒருபுறம் என்றால் சேண்பாக்கம் தொடங்கி தேசிய நெடுஞ்சாலையின் கீழ்மொணவூர், மேல்மொணவூர் வரை உள்ள நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரம் சதுப்பேரி கரையில் இரவு நேரங்களில் வாகனங்களில் எடுத்து வரப்படும் குப்பைகூளங்கள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.  சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி, கீழ் மொணவூர், மேல்மொணவூர் சதுப்பேரியின் கரையாக உள்ள சர்வீஸ் சாலை பகுதி என 2 இடங்களில் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் 24 மணி நேரமும் எழும் ரசாயன புகையால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பிற வாகன ஓட்டிகள், அப்பகுதியை சேர்ந்த மக்கள், பாதசாரிகள் என அனைவரும் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.

இதுதொடர்பாக நாளிதழ்களில் செய்திகள் படங்களுடன் வெளியாகும்போது மட்டும் தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் தனியார் நிறுவனமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அப்பகுதிகளில் வந்து குப்பைகளை அள்ளும் பணியை மேற்கொள்கின்றனர்.  எனவே, நிரந்தரமாக அங்கு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு குப்பைகளை கொட்டி எரிக்கும் சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chennai ,Bangalore ,Kilimanavur ,Vellore , Vellore: In Vellore, the Chennai-Bengaluru National Highway service is criss-crossed by roadside garbage.
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...