×

ஆந்திராவிலிருந்து காரில் கடத்தல் 52 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்த 52 கிலோ கஞ்சாவுடன், 4 பேரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கஞ்சா விற்பனையாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சிட்லபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையில், நேற்று போலீசார் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை, போலீசார் மடக்க முயற்சித்தபோது, அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை விரட்டி சென்று பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா வைத்திருந்தனர். இதனால், 4 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த அல்அமீது (எ) அமீன்அல்லா (35), குண்டலசீனு (28), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (38), தாம்பரம் அடுத்து முடிச்சூர் பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன் (42) எனவும், ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக கடந்த ஒரு வருடமாக ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்து, அதனை பேருந்து மூலம் ராமநாதபுரம் கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்து 52 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Andhra Pradesh , 4 arrested with 52 kg ganja smuggled by car from Andhra Pradesh
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...