தேனி எம்பி தொகுதி தேர்தலை எதிர்த்த வழக்கு ரவீந்திரநாத் எம்பி நேரில் ஆஜராகி சாட்சியம்: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தேனி மக்களவை தொகுதி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்பி ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். வேட்புமனுவில் சொத்து உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால், அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் தேனி தொகுதி எம்பி  ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, நிறுவனம் ஒன்றின் இயக்குனராக இருந்தது, வங்கியில் கடன் வாங்கியது மற்றும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது உள்ளிட்டவை குறித்து மிலானி தரப்பு வழக்கறிஞர் வி.அருண் கேள்விகள் கேட்டார். அனைத்து கேள்விகளுக்கும் சாட்சி கூண்டில் ஏறி பதிலளித்த ரவீந்திரநாத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்ததையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories: