சென்னை: தமிழ்நாட்டில் கோடைகால மின்தேவை அதிகரித்தாலும் சமாளிக்க மின்வாரியம் தயாராக உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மார்ச் 2022ல் 17,196 மெகாவாட் அளவாக இருந்த மின்தேவை 2023 மார்ச் மாதத்தில் 18,053 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மின்தேவை 18,500 மெகாவாட் அளவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை:
தமிழ்நாட்டில் மேலும் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஸ்மார்ட் மீட்டர்கள் மின் நுகர்வோர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படுவதால் மின் இழப்புக்கு வாய்ப்பு இல்லை என்றார்.
100 இடங்களில் மின்சார சார்ஜிங் நிலையங்கள்:
மின்வாரியத்துக்கு சொந்தமான 100 இடங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

