×

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13 தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைகைதிகளும் இதில் அடங்குவர். இந்நிலையில் மொழித் தேர்வை 50,000 பேர் தேர்வு எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மார்ச் 24 மற்றும்  ஏப்.10- மற்றும் ஏப்ரல் 24-ல் தேதிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காத நிலையில் மேலாண்மை குழுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

12-ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும். மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கி துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வர வேண்டும்.

மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளது. மொழித் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகள் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைக்காக பெற்றோர் இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாதது தெரிய வந்தது. அச்சம் காரணமாக தேர்வுக்கு வரமுடியாத மாணவர்களையும் அடையாளம் கண்டு அச்சம் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கும் வகையில் பெற்றோர் ஒத்துழைப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Tags : Department , 50,000 students who failed to appear for Class 12 public exam to be re-seen: School Education Department circular
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...