கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் சோலை மந்திகளின் எண்ணிக்கை உயர்வு: வனத்துறை தகவல்

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் வாழும் சோலை மந்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதிக்குள் கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் தொடக்கத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மீண்டும் பேரிஜம் வனப்பகுதி செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இவ்வனப்பகுதியில் சோலை மந்திகள் அதிகம் காணப்படும். தற்போது இவைளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பாலூட்டிகளில், முதன்மை இனமாக ஆய்வாளர்களால் கருதப்படும் சோலை மந்திகள், மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் மட்டும் வாழக்கூடிய இயல்பு கொண்டவை. மேலும், இவை சோலை மரங்களின் விதைகளை, வனம் முழுவதும் பரப்புவதில் பெரும்பங்காற்றுவதால், இவற்றை காப்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே, பேரிஜம் வனப்பகுதிக்குள் இருக்கும் சவுக்கு மரங்களை அகற்றி, சோலை மரங்களை அதிகம் நடவு செய்யும் பணிகள் வனத்துறையால் துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகரித்துள்ள சோலை மந்திகளும், சோலை மர விதைகளை அதிக அளவில் பரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: