×

பாஜக துணை முதல்வரின் மனைவிக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி: ஆடை வடிவமைப்பாளர், தந்தை கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநில பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவியான அம்ருதா பட்னாவிஸ், தனியார் வங்கி ஒன்றில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். அவர் தனக்கு பெண் ஒருவர் ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக போலீசிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘கடந்த 2021 நவம்பரில் அனிக்ஸா அனில் ஜெய்சிங்கனி என்ற பெண் என்னை தொடர்பு கொண்டார். தான் ஒரு டிசைனர் என்றும் தனது டிசைனில் உருவான உடைகள், நகைகள், காலணிகளை நான் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அணிந்து கொள்ளும்படியும், இதன்மூலம் தனது பிராண்ட் பிரபலமடையும் என்றும் அப்பெண் என்னிடம் கூறினார். நானும் அந்தப் பெண் மீதான அனுதாபத்தில் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டேன்.

இருப்பினும் அவர் கொடுத்த பொருட்களை நான் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பயன்படுத்தியதாக நினைவில் இல்லை. அவற்றை நன்கொடையாக பிறருக்கு கொடுத்துவிட்டேன். சில நாட்கள் கழித்து அனிக்ஸா  தனது தந்தைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி, ஒரு கவரில் கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பினார். அந்த கடிதத்தை நான் முழுமையாக படித்து கூட பார்க்கவில்லை. இன்னொரு நாள் எனது காவலாளியிடம் பொய் சொல்லிவிட்டு, எனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவர் என்னிடம், சூதாட்டக்காரர்கள் குறித்து போலீசில் புகார் அளிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலே அவர்களிடமிருந்து பணத்தை கறக்க முடியும் என்றும் கூறினார். இதையடுத்து அவரை எனது காரிலிருந்து இறக்கிவிட்டேன்.

அதன்பின் அவரது போன் அழைப்புகளை நான் ஏற்கவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இரவு 9.30 மணியளவில், அனிக்ஸா என்னை தொடர்புகொண்டு, வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள அவரது தந்தையின் நிலையைக் கூறியதுடன், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க உதவி செய்தால் ரூ.1 கோடி தருவதாக என்னிடம் கூறினார். இதை அவர் சொன்னதும் உடனடியாக தொலைபேசி அழைப்பைத் துண்டித்து, அவருடைய செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்’ என்று அதில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்திய மலபார் ஹில் காவல் நிலைய போலீசார், அம்ருதாவிற்கு ரூ.1 கோடி லஞ்சம் தருவதாகக் கூறிய டிசைனர் அனிக்ஸா அனில் ஜெய்சிங்கனி மற்றும் அவரது தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bajaka ,Deputy Chief , Attempt to pay Rs 1 crore bribe to BJP Deputy Chief Minister's wife: Fashion designer, father arrested
× RELATED பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!