×

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பு பதில் தர ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பு பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கியது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கலைத்தது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. அவரும் நேற்று பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனோஜ் பாண்டியன் வழக்கோடு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதிட்டார். கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விதிகளின்படி தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை என்றும் சர்வாதிகார போக்குடன் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுள்ளார் என்றும் வாதிடப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற பின் எதற்காக சட்டமன்றத்தில் கட்சி சாராத உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு கட்சி விதிகள் அதிகாரம் ஏதும் வழங்கவில்லை என்றும் வாதிட்டார். கட்சியில் இருந்து நீக்கும் முன் குற்றச்சாட்டு அறிக்கை வழங்கி இருக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் கொடுக்கும் முன் சஸ்பெண்ட் தான் செய்ய முடியுமே தவிர உடனடியாக நீக்கம் செய்ய முடியாது என்றும் வாதிடப்பட்டது. மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பரிந்துரை தான் செய்ய முடியும் என்றும் 2022 ஜூலை 11க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாட அனுமதிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சலீம் ஆஜராகி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீடிப்பதாக குறிப்பிட்டார். அப்படி இருக்கும் போது இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், மனோஜ் பாண்டியன் வழக்கில் ஜூலை 11 தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டதையும் கூறினார். பொதுக்குழு இடைக்கால பொதுக்குழு செயலாளருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது; அந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான் நீக்கம் செய்யப்பட்டதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

வாதங்களை கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பு பதில் தர உத்தரவிட்டார். இடைக்கால மனு மீதான வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் வழக்கு விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்று முழு விசாரணை நடத்துவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். மனோஜ் பாண்டியன் வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் மனுவுக்கு விளக்கமளிக்க மனோஜ் பாண்டியனுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Edupadi Palanisamy ,Indirect Public Commission ,ICORD , AIADMK general committee resolution, Palaniswami, ICourt
× RELATED நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல்...