சிக்கமகளூரு: வெற்றி பெறுபவர்களுக்கு கண்டிப்பாக பாஜவில் சீட்டு கொடுக்கப்படும் என சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் நடந்த விஜய் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார். சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தலைமையில் இன்று விஜய் சங்கல்ப யாத்திரை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தொகுதியைச் சேர்ந்த எம்பி குமாரசாமி கலந்து கொண்டார். ஆனால் எடியூரப்பா வருவதற்கு முன் அங்குள்ள திருமண மண்டபத்தி்ல், முடிகெரேயை சேர்ந்த பாஜ தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் தனிப்பட்ட கூட்டம் நடத்தினர்.
அதில் எஸ்சி, எஸ்டி மற்றும் தாழ்த்தப்பட்டோர் பலரையும் எம்எல்ஏ குமாரசாமி மதிப்பது கிடையாது. அவர் உள்ளூர் மக்களை மதிப்பது கிடையாது. எந்த ஒரு நலத்திட்டங்களும் சரிவர செய்யவில்லை. அவரை தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் எம்எல்ஏ சீட்டு பாஜவில் கொடுக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து அங்கு வந்த எடையூரப்பா, தீர்மான நகலை கொடுத்தனர். இதற்கிடையில், தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 173) போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து எடியூரப்பா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘லிங்காயத்து சமூகத்தினர் வாக்கு எனக்கு தேவையில்லை என கூறி எம்எல்ஏ சிடி ரவி பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அவர் அப்படி பேசக்கூடாது. அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும். நான் சி.டி.ரவியை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசுகிறேன்.
கட்சியை சேர்ந்த அனைவரும் முக்கியம். இதில் ஜாதி, மதம் என பிரிக்கக் கூடாது. அதேபோல எம்எல்ஏ குமாரசாமிக்கு மூடிகெரேயில் சீட்டு கொடுப்பீர்களா என கேட்கிறார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு கண்டிப்பாக சீட்டு கொடுக்கப்படும்.
இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். நாம் செய்ய வேண்டியது பாஜவை 140க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதுகண்டிப்பாக வெற்றி அடைந்து மீண்டும் ஆட்சி அமைக்கும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, பாஜ வேட்பாளருக்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார்.

