×

பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்மில் பெண் சடலம் கண்டெடுத்த வழக்கில் 3 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்மில் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு மாநகரில் கடந்த 13ம் தேதி இரவு பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்மில் கொலை செய்யப்பட்ட பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த ரயில்வே போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் 27 வயதான தமன்னா என்பதை கண்டுபிடித்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த தமன்னா சில வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் அப்ரோஸ் என்ற நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அப்ரோஸ்சுடன் கருத்து வேறுபாடுடன் வாழ்ந்து வந்த தமன்னா அப்ரோஸின் நெருங்கிய உறவினரான இந்திகாப் என்ற இளைஞரை காதலிக்க துவங்கினார். பல எதிர்ப்புகளுக்கு இடையே தனது கணவர் அப்ரோஸை விவாகரத்து செய்த தமன்னா, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்திகாபை திருமணம் செய்து கொண்டு பீகாரில் இருந்து பெங்களூருவிற்கு குடியேறி இருவரும் புது வாழ்க்கையை வாழ துவங்கினர்.

இந்திகாபிற்கு இது முதல் திருமணம் என்பதால் அவரது குடும்பத்தில் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பெங்களூருவில் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வரும் இந்திகாபின் சகோதரன் நவாப் தனது சகோதரனின் இந்த திருமணத்தை முறித்துக் கொள்ள தீவிரமாக வலியுறுத்தி வந்துள்ளதாக தெரியவருகிறது. குடும்பத்தார் பேச்சையும் தனது சகோதரன் நவாப் பேச்சையும் தூக்கி எறிந்து விட்டு ஏசி மெக்கானிக்காக வேலை செய்து கொண்டு தமன்னாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தனது நெருங்கிய உறவினர் அப்ரோஸ் வாழ்க்கையையும் தனது சகோதரன் வாழ்க்கையையும் தமன்னா அழித்து விட்டதாக கருதிய நவாப், தமன்னாவுக்கு தகுந்த பாடம் புகட்ட திட்டமிட்டு கடந்த 12ம் தேதி நவாப், தமன்னா ஆகிய இருவரையும் சமாதானம் பேசி ஒன்றாக இருக்கலாம்‌ என்று கூறி தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளான். தனது மனைவியை அழைத்து கொண்டு இந்திகாப் கலாசிபாளையாவில்  உள்ள நவாப் வீட்டிற்கு சென்றார். அங்கு அதிர்ச்சி தரும் சம்பவம் நடைபெற்றது.

நவாப் தனது வீட்டில் நண்பர்கள் உறவினர்கள் என 7 பேரை வரவழைத்து ஒரு கும்பலாக காத்து கொண்டிருந்தனர். தம்பதிகள் இருவரும் நவாப் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களை சூழ்ந்து கொண்ட கும்பல் தமன்னா உனக்கு சரியான மனைவி கிடையாது இந்த திருமணத்தால் குடும்பம் முழுவதும் பிரச்சனையாக உள்ளது. இந்த பெண்ணை விட்டுவிட்டு நீ வீட்டிற்கு போ நாங்கள் இவளுக்கு புத்திமதி கூறி பீகாரில் உள்ள சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறோம் என மிரட்டி இந்திகாபை தனியாக அனுப்பி வைத்துள்ளனர். பின்பு தமன்னாவை மிரட்டி அவளை முதல் கணவனிடம் சேர்ந்து வாழ கூறியுள்ளனர். தமன்னா அதை ஏற்றுக் கொள்ளாமல் தான் இந்திகாப் உடன் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் என்று கூறியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தின் உச்சத்தில் நவாப், தமன்னாவை கடுமையாக தாக்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையை மறைக்க முடிவெடுத்த நவாப் மற்றும் அவருடன் இருந்த கூட்டாளிகள் பெங்களூரு  அவின்யூ சாலையில் உள்ள ஒரு கடைக்கு சென்று நீல நிற பிளாஸ்டிக் டிரம்மை வாங்கி வந்து அதில் தமன்னா உடலை அடைத்துள்ளனர்.

பின்பு தனது கூட்டாளிகளில் ஒருவரின் ஆட்டோவில் பிளாஸ்டிக் டிரம்மை எடுத்து அதை பல இடங்களில் தூக்கி எறிந்து வர முயற்சித்த நிலையில் இறுதியாக பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தை அவர்கள் அடைந்த போது  ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் தமன்னா உடல் இருந்த பிளாஸ்டிக் டிரம்மை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். போலீசார் இந்த வழக்கை விசாரிக்க துவங்கிய நிலையில் மூன்று நபர்கள் பிளாஸ்டிக் டிரம்மை ரயில் நிலைய வாயிலில் வைத்துவிட்டு சென்ற வீடியோவை கண்டுபிடித்தனர்.  ஆட்டோ பதிவு எண்ணை கண்டுபிடித்த போலீசார், அதன் அடிப்படையில் ஒரு புறம் விசாரணையை துவங்கி குற்றவாளிகளை நெருங்கிய நிலையில் மறுபுறம் புதிதாக வாங்கப்பட்ட பிளாஸ்டிக் டிரம்மை எந்த கடையில் இருந்து வாங்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து அங்கு யார் பிளாஸ்டிக் டிரம்மை வாங்கியது என்று கண்டுபிடித்து சிசிடிவியில் உள்ள ஆட்டோ டிரைவர் தான் பிளாஸ்டிக் டிரம்மை வாங்கியது இவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்திகாப் தனது மனைவி தமன்னாவை தேடி கொண்டிருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நவாப் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் தலைமறைவாக உள்ளதை கண்டறிந்தனர். பிறகு நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நவாப் கூட்டாளிகளான கமல், ஷாகிப், தன்வீர் என மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நவாப் உள்ளிட்ட 5 குற்றவாளிகளை ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதை செய்தியாளர்களிடம் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்பி சவுமியலதா உறுதி செய்தார்.



Tags : Baiyapanahalli ,Bengaluru , 3 people arrested in case of finding dead body of woman in plastic drum at Baiyapanahalli railway station in Bengaluru
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...