துபாயில் நாளை முதல் 20ம் தேதி வரை 9வது உலக தமிழர் பொருளாதார மாநாடு: அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

சென்னை: துபாயில் நாளை 18 முதல் 20ம் தேதி வரை 9வது உலக தமிழர் பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். துபாயில் நாளை(18ம் தேதி) முதல் வரும் 20ம் தேதி வரை 9வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இதையடுத்து அவர் சென்னையில் இருந்து நேற்று துபாய் சென்றார்.  

இது குறித்து மாநாட்டின் துணைத் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கூறியயதாவது: துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க பொருளாதார மாநாடு பெரும் துணையாக இருக்கும். 3 நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாஃபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். 3 நாட்கள் மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம், அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம், போன்ற பல விஷயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். புதிய நிறுவனங்கள் தொடங்குதல், சிறு குறு தொழில், கட்டுமானம் ரியல் எஸ்டேட், இளைஞர் மேம்பாடு, கல்வி, தகவல் தொழில்நுட்பம் குறித்து பல்துறை வல்லுநர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளனர். தமிழகத்திற்கு பலமடங்கு தொழில் வளர்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும் மிகப்பெரிய பங்கு இந்த மாநாட்டின் மூலம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: