×

ரூ.1.50 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை பறிமுதல்

வேலூர்: திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு சிலை கடத்தி விற்பனை செய்ய உள்ளதாக வேலூர் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து, அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர்.

அதில் ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையாரின் ஒன்றரை அடி உயரம், ஐந்தரை கிலோ எடை கொண்ட சிலை இருந்தது. இதை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம் புது வாணியங்குளத்தைச் சேர்ந்த கண்ணன்(41), திருவண்ணாமலை அடுத்த புதுமை மாதா நகரை சேர்ந்த வின்சென்ட்ராஜ்(45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஐம்பொன் சிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Aimbon , Aimbon statue worth Rs.1.50 crore seized
× RELATED தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் ஐம்பொன்...