ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சேதுமாதவர் தீர்த்தக்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் சேதுமாதவர் தீர்த்தமும் ஒன்று. கோயில் மூன்றாம் பிரகாரம் தென்மேற்கு பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த தீர்த்தக் குளத்தில் நீராடும் பக்தர்கள் சேதுமாதவர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்வதுடன் மற்ற தீர்த்தங்களில் நீராடிச் செல்வர்.
ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் வசந்த உற்சவம் திருவிழா பழமையான இந்த தீர்த்தக்குளத்தில்தான் நடைபெறும். உற்சவ நாட்களில் பக்தர்கள், குடும்பத்துடன் சேதுமாதவர் தீர்த்த குளத்திற்கு வந்து, படிகளில் அமர்ந்து பேசி மகிழ்வது வழக்கமாக இருந்தது. பின்னர் உற்சவ திருவிழா சம்பிரதாய நிகழ்ச்சியாக மாறிப் போனதால் பக்தர்கள் வருகையும் குறைந்தது. இதனால் குளத்தின் பராமரிப்பும் ஆண்டுதோறும் நடத்தப்படாமல் போனதால் தீர்த்தக்குளத்தில் சேறும் சகதியும் சேர்ந்து தண்ணீரும் மாசுபட்டது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சேதுமாதவர் தீர்த்தக்குளம் தூர்வாரி மராமத்து செய்யும் பணி துவங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இக்குளத்தில் தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடந்தது. தற்போது கோயில் துணை கமிஷனர் மாரியப்பன் நடவடிக்கையால் கடந்த 2 நாட்களாக குளத்தில் தேங்கியிருந்த சேறு சகதியை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
