×

சோழ மன்னர்களின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் நாகப்பட்டினம் சூடாமணி விஹாரம் புதுப்பிக்கும் பணி 70 சதவீதம் நிறைவு

நாகப்பட்டினம்: சோழ மன்னர்களின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் நாகப்பட்டினம் சூடாமணி விஹாரம் ரூ.7 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் ஆட்சி செலுத்திய சாம்ராஜ்யங்களில் சோழ சாம்ராஜ்யத்திற்கு என்று தனி இடம் உண்டு. பொன்னி (காவிரி) நதி பாயும் இடங்கள் மட்டுமின்றி கடல் கடந்தும் சோழர்களின் சாம்ராஜ்யம் நீண்டிருந்தது. இவ்வாறு கடல் கடந்த சோழர்கள் ஆட்சி காலத்தில் நாகப்பட்டினத்தில் துறைமுகம் இயங்கி வந்தது. வணிகத்தில் சிறந்து விளங்கிய பூம்புகாரைப்போல நாகப்பட்டினம் நகர் சிறந்து விளங்கியது.

சோழர் ஆட்சியின் சாட்சியாக திகழும் நாகப்பட்டினத்தில் கீழடியைபோல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டால் பல வரலாற்று உண்மைகள் புலப்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொல்லியல் ஆய்வுகளின் மூலம் நாகப்பட்டினம் நகரை பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்த முடியும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். கிபி 10 முதல் 13ம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தத்திற்கும், சமணத்திற்கும் சோழ மன்னர்களால் நல்ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் வருகின்ற புத்த விகாராகிய சூடாமணி விகார் நாகப்பட்டினத்தில் தான் இருந்தது என்பதை ஆனைமங்கலம் செப்பேடு (தற்போது லைடன் பல்கலைக்கழக செப்பேடு) தெரிவிக்கிறது.

இன்றைய இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உட்பட்ட பகுதிகள் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் என்று கிபி 10ம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டு வரை அழைக்கப்பட்டு வந்தது. இந்த சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான கிடாரம் என்கின்ற (தற்கால வடக்கு மலேசியா) பகுதியின் அரசாங்க அதிகாரியான அரையன் ஸ்ரீ விஜயோதுங்கவர்மன் என்பவர் பிற்கால சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னரான முதலாம் ராஜராஜசோழனை அவரது தஞ்சை அரண்மனையில் நேரில் சந்தித்து எங்களது கிடாரத்து வணிகர்கள் வியாபாரத்துக்காக சோழ நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து இறங்கும் பொழுது அங்கு பாதுகாப்பாக தங்குவதற்கும், புத்த மதத்தை சார்ந்த நாங்கள் வழிபடுவதற்கான இடத்தை அமைத்துக் கொள்வதற்கும் அனுமதி தரும்படி கேட்டுக்கொண்டார்.

அவருடைய கோரிக்கையை ஏற்று மாமன்னர் ராஜராஜ சோழன், நாகப்பட்டினத்தில் கிடாரத்து வணிகர்கள் தங்குவதற்கும் புத்த விகார் கட்டிக் கொள்வதற்கும் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜயோதுங்கவர்மன் கிபி 1005ல் நாகப்பட்டினத்தில் புத்த விகாரை கட்டி அதற்கு அவரது தந்தை பெயரான சூடாமணி வர்ம விகார் என்று பெயரிடப்பட்டார். இந்த புத்த விகார் நாகப்பட்டினத்தில் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்ததற்கான குறிப்புகளை ஆனைமங்கலம் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது என பொன்னியின் செல்வன் கதை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நாகப்பட்டினம் பழைய நீதிமன்ற கட்டிடத்தின் வடகிழக்கு அடித்தள பகுதியில் சுரங்க அறைகளுக்கு செல்லும் 2 வழிகள் இருந்ததாகவும், அவை விஷ ஜந்துக்களின் பயத்தினால் 1970களில் மூடப்பட்டதாகவும் நாகப்பட்டினத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது நாகப்பட்டினம் பழைய நீதிமன்ற கட்டிடம் அருகில் புதிதாக நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடங்களுக்கு நீதிமன்றம் சென்றது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி மத்திய தொல்லியல் துறை வசம் கட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வரலாற்று பொக்கிஷமான சூடாமணி விஹாரம் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.7.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக டன் கணக்கில் சுண்ணாம்புகள் கொண்டு வரப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. சுண்ணாம்புகளுடன் கடுக்காய், கருப்பட்டி ஆகியவை கலந்து 20 நாட்களுக்கு மேல் ஊறவைக்கப்படுகிறது. இவ்வாறு ஊறவைத்த கலவையை ராட்சத கிரைண்டர் கொண்டு அங்கேயே அரைக்கப்படுகிறது. இவ்வாறு அரைக்கப்பட்ட கலவை சுவற்றில் பூசப்படுகிறது.

சுண்ணாம்பு காய்ந்த பின்னர் முட்டையின் வெள்ளை கருவை மையலாக்கி சுவற்றில் பூசி மெருகேற்றும்பணி நடந்து வருகிறது. இவ்வாறு புனரமைப்பு செய்யும் பணி பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ் பிரிவால் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சோழமன்னர்களின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் சூடாமணி விஹாரம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் மூடப்பட்ட சுரங்க அறைகளுக்கு செல்லும் 2 வழிகள் தெளிவாக தெரிகிறது. தற்போது நடைபெறும் இந்த கட்டிட புனரமைப்பு காலத்திலேயே இந்த சுரங்க அறைகளுக்கு செல்லும் 2 வழிகளை திறந்து ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம், கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் கூறப்பட்ட ராஜராஜ சோழனை (அருள்மொழிவர்மன்) உடல்நலம் குன்றிய நிலையில் புத்த துறவிகள் சிகிச்சை அளித்த நிலவறை குறித்த உண்மை தெரியவரும் என தெரிவிக்கின்றனர்.

Tags : Nagapattinam ,Sudamani Viharam ,Chola , Historical Treasure of Chola Kings, Nagapattinam Sudamani Viharam, Route to Mining Room,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...