ஏப்ரல் 3 முதல் 5ம் தேதி வரை திருப்பதியில் வருடாந்திர வசந்த உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் ஏப்ரல் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும்  பங்குனி மாதம்  பவுர்ணமியில் நிறைவு பெறும் விதமாக 3 நாட்கள் வருடாந்திர வசந்த உற்சவம்  நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கு வருடாந்திர வசந்த உற்சவம் ஏப்ரல் 3ம் தேதி முதல் பவுர்ணமி தினமான 5ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் ஏப்ரல் 3ம் தேதி காலை 7 மணிக்கு  மலையப்ப சுவாமி, தேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலாவாக  வசந்த  மண்டபத்திற்கு எழுந்தருள உள்ளனர். இங்கு வசந்த உற்சவ அபிஷேகம்  முடித்துக் கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக செல்ல உள்ளனர். 2ம் நாளான ஏப்ரல் 4ம் தேதி தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை மாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து  இழுக்க வசந்த மண்டபத்திற்கு செல்ல உள்ளனர். அங்கு அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர்.  கடைசி நாளான ஏப்ரல் 5ம் தேதி தேவி, பூதேவியுடன்  மலையப்ப சுவாமி, சீதா, ராமர், லஷ்மணர், ஆஞ்சநேயர்  உற்சவர்,  கிருஷ்ணர்   ருக்மணியுடன் ஊர்வலமாக வசந்த மண்டபத்திற்கு  சென்று அங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மாலை நான்கு மாடவீதியில்  வலம் வந்தபடி கோயிலுக்கு செல்ல உள்ளனர்.

இதை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுவாமி, தாயாருக்கு   பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.  தினமும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் பிரமாண்டமாக நடைபெறும் வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளை ஏப்ரல் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Related Stories: