அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் ஆவியாவதை தடுக்கும் தொழில்நுட்பம் கட்டாயம்: பசுமை தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அனைத்து பெட்ரோல் விற்பனை எரிபொருள் நிலையங்களிலும்  ‘‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெட்ரொல் நிலையங்களில் இருந்து வெளியேறும் எரிபொருள் ஆவியாகி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் தடுப்பதற்காக அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் நிறுவப்பட வேண்டும் என கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்திருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ‘‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் ” அமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் ‘‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்” தொழில்நுட்பம் அமைக்கப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.  அதேபோல், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வேப்பர் ரெக்கவரி தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ‘‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்” என்ற தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ‘‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் ” ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஒன்றிய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழிமுறைகளை கடைபிடிக்க தவறும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மீது ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ‘‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்” தொழில்நுட்பத்தை புதிதாக கால வரம்பு நிர்ணயம் செய்து  ஏற்படுத்த வேண்டும். மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி, இந்த தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஏற்படுத்தாத பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேலும், ‘‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்” தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டதா, சரியாக பராமரிக்கப்படுகிறதா, விதி மீறல்கள் நடக்கிறதா என்பதனை மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு, எண்ணெய் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: