×

தங்க நகை இருப்பதாக எழுதி அட்டை பெட்டியில் டைல்ஸ் கற்கள் வைத்த ஆசாமி: அரக்கோணம் ரயில் நிலையத்தில் ருசிகரம்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் தங்க நகை விபரம் எழுதிய ஒரு அட்டை பெட்டி கிடந்தது. இதை எடுத்து பார்த்தபோது அதில் சிறிய அளவிலான டைல்ஸ் கற்கள் இருப்பது தெரிய வந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயில் நிலையத்தின் அருகே டிக்கெட் முன்பதிவு கவுன்டர் உள்ளது. அங்கு பயணிகள் வரிசையில் நிற்கும் பகுதி அருகே நேற்றிரவு சிறிய அளவிலான அட்டையிலான பெட்டி ஒன்று இருந்தது. இதை பார்த்த பயணிகள் அந்த பெட்டியில் ஏதோ மர்மப்பொருள் இருக்கலாம் என அஞ்சினர்.

ஒரு சிலர் அருகே சென்று பார்த்தனர். அந்த பெட்டியில், ஒரு ஜூவல்லரி கடையின் பெயரை எழுதி தாலிச்சரடு, கழுத்து செயின் என எழுதப்பட்டிருந்தது.   அந்த பெட்டிக்குள் தங்க நகை இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் வரும்வரை அனைவரும் காத்திருந்தனர். அந்த பெட்டியில் என்னதான் இருக்கும்? என ஆளாளுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் கழித்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பெட்டியை பாதுகாப்புடன் திறந்து பார்த்தனர்.

அப்போது அந்த பெட்டியில் சிறிய  டைல்ஸ் துண்டுகள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர். அத்துடன் அந்த பெட்டிக்குள் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அந்த சீட்டில் ‘அடுத்தவர் பொருட்களுக்கு திருடும் உங்களைப்போல் மானம் கெட்டவர்கள் இந்த உலகில் வாழ தகுதியில்லை’ இப்படிக்கு கடவுளின் தோழன். என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மர்மப்பொருள் இருக்குமோ எனக்கருதி பொதுமக்கள் அஞ்சினர். அதை திறந்து பார்த்த பின்னர்தான் ஏமாற்றுவேலை என தெரிந்தது.

பொதுமக்களை ஏமாற்றுவதற்காக நகை இருப்பதுபோன்று எழுதி யாரோ குறும்புக்காரர்கள் இதுபோன்ற வேலையை செய்துள்ளனர். அவர்கள் யார்? என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடிவருகிறோம். இருப்பினும் பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் எவ்வித பொருட்களையும் பொதுமக்கள் தொடக்கூடாது. உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர். ரயில் நிலையத்தில் நகை பெட்டியை போன்று வைத்து சுமார் ஒருமணிநேரம் பொதுமக்களை திணறடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Azami , Asami who put tiles stones in a cardboard box writing that there is gold jewellery: Yummy at Arakkonam railway station
× RELATED ‘பணம் கொடு… இல்லாவிட்டால் போலீஸ்...