×

‘பணம் கொடு… இல்லாவிட்டால் போலீஸ் ஸ்டேஷன் வா.. என மிரட்டல்: கள்ளக்காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து 50 பவுன் நகை, பணம் பறிப்பு

* மது அருந்தி பெண்களுடன் உல்லாசம்* போலீஸ் என கூறி கைவரிசை காட்டிய டிப்டாப் ஆசாமி கைது* 25 பவுன், பணம் மீட்புகூடுவாஞ்சேரி: போலீஸ் என கூறி கள்ளக்காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து 50 பவுன் நகைகள், பணம் பறித்த டிப்டாப் ஆசாமி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து  25 பவுன், பணம் மீட்கப்பட்டது. தாம்பரம் அடுத்த வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரத்தில் இளம் காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் தினமும் மாலை நேரத்தில் அமர்ந்து ஜாலியாக பேசி கொண்டிருப்பார்கள். இதை வெகு நாட்களாக நோட்டமிட்ட டிப்டாப் ஆசாமி, அவர்களிடம் பணம் பறிக்க நினைத்தார். அதற்கான திட்டத்தை வகுத்தார். அதன்படி, தனியாக இருக்கும் காதல் ஜோடிகளிடம் சென்று, ‘நான் போலீஸ்’ என கூறி, ஆண் நபரை மட்டும் தனியாக அழைத்து‌ செல்வார். அங்கு, ‘உங்கள் அப்பாவின் செல்போன் நம்பர், முகவரியை கொடு’ என கேட்டு மிரட்டுவார். இதில் பயந்து போன அந்த நபர், ‘வீட்டுக்கு தெரிந்தால் பிரச்னையாகி விடும்’ என கெஞ்சுவார். அதை சாதகமாக பயன்படுத்தி, ‘உங்கள் தந்தையிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் ‘ரூ.5 ஆயிரம் கொடு’ என மிரட்டுவார். அவரும் பயத்தில், ‘என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது’ என கூறி ரூ.2 ஆயிரம் அல்லது ரூ.3 ஆயிரம் என கொடுப்பார். அந்த மர்ம நபரும், கிடைத்தது போதும் என நினைத்து அங்கிருந்து தப்பி விடுவார். முகவரி கொடுக்க மறுத்தவர்களிடம், ‘காவல் நிலையத்துக்கு அழைத்து செல்வேன்’ எனவும் மிரட்டி பணம் பறித்துள்ளார். இது தொடர் கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், சிறுக சிறுக பணம் பார்த்து வந்த அந்த டிப்டாப் ஆசாமி, விரைவாக எப்படி பணம் சேர்க்க வேண்டும் என்று யோசித்தார். அதன்படி, திருமணமான கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து பணம் பறிக்க ஆரம்பித்தார் அந்த டிப்பாப் ஆசாமி. அதாவது, அப்பகுதியில் வலம் வந்து காரில் யாராவது நெருக்கமாக இருக்கிறார்களா என நோட்டமிடுவார். அப்படி இருந்தால் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுப்பார். பின்னர், அந்த கள்ளக்காதல் ஜோடியிடம், ‘நான் போலீஸ், ‘நீங்கள் காவல் நிலையத்துக்கு வாருங்கள், உங்களிடம் விசாரிக்க வேண்டும்’ என்று மிரட்டுவார். எதற்று வர வேண்டும் என அந்த ேஜாடி கூறினால், தயாராக இருக்கும் வீடியோ காட்டுவார். அதை பார்த்ததும் பயந்து போகும் அவர்களிடம், ‘நகை, பணத்தை கொடுத்தால் வீடியோவை டெலிட் செய்து விடுகிறேன் என்றும், இல்லையென்றால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை தீவிரமாக இருக்கும்’ என்றும் மிரட்டுவார். அந்த ஜோடியும் வேறு வழியின்றி பணம், தாலி உள்ளிட்ட நகைகளை கொடுத்துள்ளனர். அதை வாங்கி கொண்டு டிப்டாப் ஆசாமி நைசாக சென்று விடுவார். அந்த கள்ளக்காதல் ஜோடியும், காவல் நிலையத்தில் புகார் தராமல், ‘எப்பாடா தப்பித்தோம்.. பிழைத்தோம்’ என சென்று விடுவார்கள். இந்நிலையில், முடிச்சூர் சர்வீஸ் சாலையில் ஒரு டிப்டாப் ஆசாமி, போலீஸ் என கூறி பணம், நகைகளை வாங்கி செல்வதாக உளவுத்துறை மூலமாக தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பீர்க்கன்காரணை இன்ஸ்ெபக்டர் சிங்காரவேலன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில், முடிச்சூர் சர்வீஸ் சாலையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி காரில் இருந்த கள்ளக்காதல் ஜோடியினர் நெருக்கமாக இருந்தனர். அவர்களை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் கார் ஓட்டி வந்த கள்ளக்காதலனிடம் ‘வழக்கம் போல நான் போலீஸ்’ என கூறி, கீழே இறக்கி ஒரு பைக்கில் ஏற்றி கொண்டு 2 கிமீ தூரம் அழைத்து சென்றுள்ளார். அங்க, ‘உங்கள் வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடு’ என மிரட்டி, அந்த வீடியோ காட்டி ரூ.5 ஆயிரம் பறித்துள்ளார். பின்னர், அவரை அங்கேயே நிற்க வைத்து விட்டு, மீண்டும் காரின் அருகே வந்து அவரது கள்ளக்காதலியை மிரட்டி 11 பவுன் நகைகளை பறித்துள்ளார். இதே போன்று மே 19ம் தேதி வண்டலூர் பகுதியில் காரில் நெருக்கமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியிடம் நகைகளை பறித்தது மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் உட்பட  5 இடங்களில் சுமார் 50 பவுன் நகைகளை பறித்தது தெரியவந்தது. அந்த டிப்டாப் ஆசாமி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (39) என்பதும், கடந்த 10 வருடங்களாக செயின் பறிப்பில் ஈடுபட்டதும், சமீபத்தில் பள்ளிக்கரணை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி சிறைக்கு சென்று கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியே வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, சிவராமனை பிடிக்க தனிப்படை போலீசார் கடலுருக்கு விரைந்தனர்.  அங்கு அவர் இல்லாததால் சிவராமனின் செல்போன் நம்பரை டிரேஸ் செய்தபோது பாண்டிச்சேரியில் இருப்பதாக தெரியவந்தது. உடனே அங்கு விரைந்தனர். 2 நாட்களாக தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் செல்போன் நம்பரை டிரேஸ் செய்தபோது பெங்களூரில் இருப்பதாக தெரிந்தது. அங்கு சென்று தேடியபோதும் சிக்கவில்லை. தனிப்படை போலீசார் சென்னைக்கு வந்துவிட்டனர். இந்நிலையில், நன்மங்கலத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் சிவராமன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக் தகவல்கள் வருமாறு: சிவராமனும் அவரது கூட்டாளிகளும், 2012ம் ஆண்டு முதல் கடலூரில் இருந்து சென்னைக்கு பைக்கில் வந்து சென்னை உட்பட பல இடங்களில் செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடலூருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறினார். அந்த வகையில், சென்னை உட்பட மாமல்லபுரம், தேவனாம்பட்டினம், நெய்வேலி கள்ளக்குறிச்சி என பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிப்பு மட்டுமே சுமார் 41 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பறித்த நகைகளை தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள மார்வாடி கடையில் விற்று, அதில் வரும் பணத்தில் பாண்டிச்சேரி, பெங்களூர் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து மது அருந்தி பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிவராமனிடம் ஒரு பைக், 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post ‘பணம் கொடு… இல்லாவிட்டால் போலீஸ் ஸ்டேஷன் வா.. என மிரட்டல்: கள்ளக்காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து 50 பவுன் நகை, பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiptop Azami ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…