சென்னை: ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க ரூ.1,620 கோடி மதிப்பில் சிக்னல் கட்டுப்பாடு கருவிகள் வாங்க ஒப்புதல் அளித்துள்ளனர். ரூ.1,620 கோடி மதிப்பில் அதி நவீன சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பட்டு கருவிகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் போக்குவரத்து பயன்பாடு என்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக 118 கி.மீட்டர் தொலைவிற்கு ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பீட்டுல் பணிகளானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயிலானது ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் செயல்படு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை ஒவ்வொரு நிறுவனத்திடமும் வழங்கி வருகிறது.
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டம் பணி நிறைவின்போது வழித்தடம் 3, 4 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ இரயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான மிக முக்கிய தேவையான சிக்னல், இரயில் இயக்க கட்டுப்பாடு, காணொலி மேலாண்மை அமைப்பு அவசியமாகிறது என்றும், இந்த அதிநவீன தொழில்நுட்பத்திற்கான கருவிகள் ரூ.1620 கோடி மதிப்பில் வாங்க ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி ஹிட்டாச்சி நிறுவனத்தின் குழு இயக்குநர் மனோஜ் கிருஷனப்ப குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ரூ. 1,620 கோடி மதிப்பில், சமிக்கை, இரயில் இயக்க கட்டுப்பாடு, காணொலி மேலாண்மை அமைப்பினை வடிவமைத்து, உற்பத்தி செய்து, நிறுவி, சோதித்து செயல்படுத்துதல் போன்றவற்றிற்கு ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி இரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
பிரத்தியோகமாக தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (Communication Based Train Control System), இரயிலை இயக்க ஓட்டுநர் தேவையின்றி தானாகவே இயங்க வழிவகுக்கிறது. இந்தச் சிறப்பான அமைப்பு, பன்னாட்டு தரங்களின் அடிப்படையில் அமையும். இந்த ஒட்டமொத்த அமைப்பும் குறைந்தபட்சம் 90 வினாடி இடைவெளியில் ஓட்டுனர் இல்லாத தாளியங்கி இரயில்களை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஓட்டுநர் இல்லாமல் இரயிலை தானியங்கி அடிப்படையில் இயக்கப்படுவதோடல்லாமல், பணிமனைக்குள் இரயில்கள் வந்து செல்வதும், நடைமேடை தடுப்பு கதவுகளின் செயல்பாடு, பயணிகளுக்கான தகவல் மற்றும் காட்சி அமைப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த அமைப்பு, மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் இயக்கக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டுப்பாட்டு சமிக்ஞை ஆகியவற்றை குறித்த நேரத்தில் காணொளியை காட்சிப்படுத்த வகை செய்கின்றது. 118.9 கி.மீ. நீளம் கொண்ட சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2- ல் 2 பணிமனைகள், 113 மெட்ரோ இரயில் நிலையங்கள், 138 இரயில்கள் மற்றும் 3 பராமரிப்பு இரயில்களுக்கு சிக்னலிங், இரயில் கட்டுப்பாடு மற்றும் வீடியோ மேலாண்மை அமைப்பு ஆகியவை இந்தப் பணியில் அடங்கும். இப்பணிகள் அனைத்தும் 2027- ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த அமைப்பும் இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ சிக்னலிங் தொகுப்பு ஆகும். இவ்வாறு சென்னை மெட்ரோ இரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர் கே.ஏ.மனோகரன், துணை ஆலோசகர் ஏ.சங்கரமூர்த்தி, பொது ஆலோசகர் குழுத் தலைவர் டோனி புர்செல், முதன்மை விற்பனை மேலாளர் ராமன் குமார் செஹ்கல் மற்றும் பலர் இருந்தனர்.
