×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக பணம் சுருட்டியவர் கைது

விழுப்புரம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது நண்பர் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகர் ரெட்டி. இவர் தனக்கு தெரிந்த புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை செய்து வருவதாகவும் மேலதிகாரிகள் தங்களுக்கு நல்ல பழக்கம் எனவும் இதன்மூலம் வேலை வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளனர். அதனை நம்பிய நாராயணசாமி தனது மருமகளுக்கு செவிலியர் மற்றும் உறவினர்களுக்கு அட்டெண்டர் வேலை என்று ஐந்து பேருக்கு வேலைக்காக சுமார் ரூ.40 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட மணிகண்டன், அவரது மனைவி மகேஸ்வரி, பிரபாகர் மற்றும் மணிகண்டனின் தந்தை முனியப்பன், அவரது மனைவி சாந்தி மகள் நித்யா ஆகிய 6 பேரும் சேர்ந்து போலியான பணி நியமன ஆணை தயாரித்தும், போலியான ஐடி கார்டு தயாரித்தும் கொடுத்துள்ளனர். இதை வைத்து பணியில் சேர்ந்த போது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனிடம் சென்று கேட்டபோது ரூ.8.50 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.31.50 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதுசம்பந்தமாக நாராயணசாமி அளித்த புகாரின்படி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், நேற்று முனியப்பனை (54) கைது செய்து அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.Tags : Puducherry Jipmar Hospital , Puducherry, Jipmar Hospital, job, money scammer arrested
× RELATED வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜிப்மர்...