×

ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperesrs'ஆவண குறும்படத்தில் உள்ள யானையை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளை பராமரிப்பது குறித்து ஆவண குறும்படம் தயாரிக்கப்பட்டது. காட்டு நாயக்கர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிகளால் வளர்க்கப்பட்ட யானைகள் குறித்த The Elephant Whisperesrs என்ற இந்த ஆவண குறும்படத்தை குனெட் மொன்கோ தயாரிப்பில் கார்த்திக்கி குன்செல்வெஸ் இயக்கினார். இந்திய தயாரிப்பில் முதல் முதலில் ஆஸ்கர் வென்ற படம் என்ற பெருமையை The Elephant Whisperesrs பெற்றுள்ளது.  

 The Elephant Whisperesrs தேசியளவில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் தற்சமயம் முதுமலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆவண படத்தில் நடித்த 2 யானைகளையும் பார்க்க உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பொம்மி யானை சிறிய குட்டி என்பதால் அதன் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் காண்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் ராகு யானை சுற்றுலா பயணிகள் காணும் வகையில் நிற்கவைக்கப்பட்டுள்ளது.

அதனை பார்த்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சென்னை சென்று விட்டதால் அவர்களை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் இடம்பெற்ற யானைகள் மற்றும் தம்பதியர் ஒரே நாளில் புகழ்பெற்ற நட்சத்திரங்களாகி உள்ளன. இதனால் அந்த நட்சத்திரங்களை காண சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  


Tags : Oscar, Award, The Elephant Whisperers, Short Film, Elephant, Tourist
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...