கர்நாடகாவில் இந்து அமைப்பினர் நடத்திய பேரணியின் போது தாக்குதல்: இஸ்லாமியர் குடியிருப்பு, மசூதி மீது கல்வீச்சு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹாவேரிமாவட்டத்தில் இஸ்லாமியர் குடியிருப்புகள் மற்றும் மசூதியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக இந்து அமைப்பினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஹாவேரி மாவட்டம் ரட்டிஹள்ளி கிராமத்தில் இந்து அமைப்பினர் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. சுதந்தர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா உருவப்படத்துடன் அவர்கள் நடத்திய பேரணி இஸ்லாமியர் வசிக்கும் பகுதி வழியாக சென்றுள்ளது.

அப்போது மசூதி மீதும் குடியிருப்புகள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த சிறுவர்கள் அச்சத்தில் அலறி கண்ணீர் வடித்தனர். இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஹாவேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேரணியில் பங்கேற்றவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் உடனடியாக 15 பேரை போலீசார் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக களத்தில் இறங்கியதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: