×

‘8 தோல்வி நாயகன் எடப்பாடியே’: திண்டுக்கல், தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

கம்பம்: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மறுபுறம் கண்டன போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். கடந்த 11ம் தேதி மதுரை வந்த எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அமமுக பிரமுகர் பதிவிட்ட வீடியோ, அதனை தொடர்ந்து அவர் அதிமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிவகங்கையில் எடப்பாடிக்கு எதிராக கருப்பு பலூன்களுடன் ஆர்ப்பாட்டம், பேனர்கள் கிழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஓபிஎஸ் அணி தரப்பில் நடந்தது.

அடுத்தக்கட்டமாக தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஒன்றியம், கம்பம், கூடலூர் நகரின் முக்கிய  பகுதிகளில் எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்து புரட்சித்தலைவி அம்மாவை நீக்கி விட்டு, பொய் வேஷம் போடும் பதவிவெறி பழனிச்சாமியே... அஇஅதிமுகவை விட்டு வெளியேறு’ என அச்சிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள் ஓபிஎஸ் அணி தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சிவக்குமார் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடமலைக்குண்டு அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் செந்தட்டி காளை, கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஓபிஎஸ் அணியினர் போஸ்டர் ஒன்றை நேற்று ஒட்டியுள்ளனர். அதில், ‘வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக உண்மை தொண்டர்கள்’ என குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘எட்டு தோல்வி நாயகன் எடப்பாடியே’ என குறிப்பிட்டு அவரை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோல அய்யலூர், எரியோடு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


Tags : '8 Nashaya Nayakan Edappadiye': Dindigul, Theni caused a sensation with the poster
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி