×

இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி ஒயிட்வாஷ் செய்து அசத்தியது வங்கதேசம்

மிர்பூர்: இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 16 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. முதல் 2 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்திய வங்கதேச அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. லிட்டன் தாஸ் 73 ரன் (57 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), ரோனி தாலுக்தார் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். நஜ்முல் ஷான்டோ 47 ரன், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷித், கிறிஸ் ஜார்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3வது தோல்வியைத் தழுவியது. டேவிட் மலான் 53 ரன் (65 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), பட்லர் 40 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். வோக்ஸ் 13, ஜார்டன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின் அகமது 2, தன்விர், ஷாகிப், முஸ்டாபிசுர் தலா 1 விக்கெட் எடுத்தனர். உலக சாம்பியனுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என தொடரை கைப்பற்றிய வங்கதேசம், ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. லிட்டன் தாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகனாக நஜ்முல் ஷான்டோ தேர்வு செய்யப்பட்டார்.


Tags : Bangladesh ,England , Bangladesh were stunned to whitewash England's hat-trick defeat
× RELATED வங்கதேச எம்பி கொலை மே. வங்கத்தில் கால்வாயில் இருந்து மனித எலும்பு மீட்பு