×

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள தயார் நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை: இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் மருத்துவர் ரேமா சந்திரமோகன் தகவல்

சென்னை: வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்வதற்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தயாராக உள்ளதாக இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் மருத்துவர் ரேமா சந்திரமோகன் தெரிவித்தார். பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. கொரோனாவால் கடந்த 3 ஆண்டுகளில் வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சளி, இருமல் மற்றும்  காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாதாரண காய்ச்சல் என்றால் 3 நாளில் குணமாகிவிடும். தற்போது பரவி வரும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் பிறகே குணமாகின்றனர். காய்ச்சலால் குணமாகியும் 3 முதல் 5 நாட்கள் வரை அதன் தாக்கம் உள்ளது. குழந்தைக்கு சாதாரணமாக ஏற்படும் சளி காய்ச்சல் தானாகவே ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். மலேரியா காய்ச்சல், எலி காய்ச்சல், உன்னி காய்ச்சல், டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சல் ஓரிரு வாரங்கள் வரை காய்ச்சல் உண்டு பண்ணும் முறையாக சிகிச்சை பெற்று அவற்றை குணப்படுத்த முடியும்.

சுவாச ஒத்திசைவு வைரஸ், அடினோ வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எச்3என்2 ஆகிய வைரஸ் பாதிப்புகள் தற்போது தலைதூக்கி உள்ளதே அதற்கு காரணம். பிப்ரவரியில் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் இம்மாதிரியான காய்ச்சல் வருவது பலருக்கும் வியப்பாக இருக்கலாம், ஆனால் இரவில் நீடிக்கும் குளிரும், அதிகாலையில் இருக்கும் பனியும் இந்த காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் வருவது இயல்பானதுதான், இந்த வைரஸ்கள் வானிலைக்கு ஏற்ப தங்களது மரபணுக்களை மாற்றிக்கொள்வதால் நீண்ட நாட்களுக்கு உடலை வாட்டி எடுத்துவிடுகின்றது.

இந்தியாவில் எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் சாதாரண காய்ச்சல்தான். பெரும்பாலானோருக்கு எந்த பெரிய பாதிப்பும் இருப்பதில்லை. சிலருக்கு உடல் சோர்வு ஒரு வாரம் வரையும், இருமல் 2 வாரங்கள் வரையும் நீடிக்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள், இந்திய மருத்துவ குழுமம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு சற்று  தீவிரத்துடன் நோய் வெளிப்பட வாய்ப்பு உண்டு. இந்நிலையில் சென்னையில் வேகமாக காய்ச்சல் பரவுவதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என அமைக்கப்பட்டுள்ள வார்டில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் மருத்துவர் ரேமா சந்திரமோகன் கூறுகையில்: நாளொன்றுக்கு காய்ச்சலுக்கு என 10 சதவீத குழந்தைகள் வருகின்றனர். அதாவது 100 பேர் வெவ்வோறு வகையான காய்ச்சலுக்கு என மருத்துவமனைக்கு வருகின்றனர். நாளொன்று மொத்தமாகவே 25% பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். அப்படியோ குழந்தைகள் அனுமதிக்க வேண்டும் என்றாலும் அதற்கான படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய படுக்கைகள் என அனைத்தும் தயாராக உள்ளது. ஏற்கனவே உள்ள காய்ச்சல் வார்டில் அதீதிவிர மற்றும் தனிமைப்படுத்தல் படுக்கைகள் உள்ளது. இதனால் காய்ச்சலை எதிர்க்கொள்வதற்கு அனைத்து வகையிலும் தயாராக உள்ளன. அக்டோபர், நவம்பர் மாதத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவது பொதுவானது. இந்தமுறை காலதாமதமாக பரவி வருகிறது. இந்த வகை காய்ச்சலானது ஒரு முறை அனைவருக்கும் வந்துவிடும். இதிலிருந்தே நோய்எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்: எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு ஒரு வாரத்துக்கும் மேலாக சளி, இருமல், ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல், நிமோனியா போன்றவை தாக்கலாம்,  ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட் அணுக்கள் எண்ணிக்கை திடீரென சரிந்துவிடுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்படலாம். எனவே 48 மணி நேரத்திற்கு பின்னரும் உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்பவில்லை எனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவ சிகிச்சை தாமதமானாலும், சுயமாக மருந்துகள் சாப்பிட்டாலும், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றாலும் உடல் நலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே காய்ச்சல் கண்டவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி ரத்தப் பரிசோதனைகள் உடல் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க மருத்துவர் ஆலோசனை வழங்கினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும். எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் சாதாரண காய்ச்சல்தான். பெரும்பாலானோருக்கு எந்த பெரிய பாதிப்பும் இருப்பதில்லை.

* காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகள்
பசி இல்லாமை, அதிக உடல் சோர்வு, தலை சுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வாய் பல் ஈறுகள் மற்றும் மூக்கில் ரத்தம் வருதல். மலம் கருப்பாக வருதல், மூச்சு விட சிரமப்படுதல், மூச்சு திணறல், மயக்கம் ஏற்படுதல், வலிப்பு ஏற்படுதல் இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும். எல்லாவற்றிலும் தற்போதைய சூழ்நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* காய்ச்சலை எவ்வாறு எதிர்கொள்வது?
காய்ச்சலின்போது இட்லி, இடியாப்பம் ,அரிசி கஞ்சி, ரசம், சாம்பார் சாதம். உணவு சாப்பிடலாம். கஞ்சி பழச்சாறு உப்பு கரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவரிடமிருந்து நம்மை சிறிது இடைவெளிவிட்டு நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கைகளை கழுவுதல், முகமூடி அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், மூக்கு மற்றும் கண்களை தொடக்கூடாது போன்ற பொது சுகாதார முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

Tags : Egmore Children's Health Hospital ,Superintendent ,Dr. ,Rema Chandramohan , Egmore Children's Health Hospital ready to face viral fever: Director and Superintendent Dr. Rema Chandramohan informs
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...