×

கடவூர், தோகைமலை பகுதி உளுந்து சாகுபடி விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை அளித்து உள்ளனர்.
கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். உளுந்து சாகுபடி மற்றும் இதன் ரகங்கள்: தற்போது பயறு வகைப் பயர்களில் உளுந்து முதன்மை பயிராக இருந்து வருகிறது. உளுந்து சாகுபடி முறைக்கு ஏற்ற ரகங்கள் வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ஆகிய ரகங்கள் ஏற்றதாக உள்ளது.

இந்த ரகங்கள் 65 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும். உளுந்தை தனிப்பயிராக விதைப்பதற்கு ஒரு எக்டேருக்கு 20 கிலோவும், ஊடு பயிராக விதைப்பதற்கு 10 கிலோவும் தேவைப்படுகிறது.
உளுந்து பயிரிடும் முறைகள்: உளுந்து பயிர் சாகுபடி செய்யும் முறையில் பூஞ்சாண விதைப்பு செய்ய ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உளுந்து விதைக்கும் கருவி: உளுந்து சாகுபடி செய்யும் முறையில் உளுந்து விதைகளை விதைக்கும் கருவிகளை கொண்டு விதைப்பு செய்தால், வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளிகளும் விடுகிறது. இதனால் ஒரு சதுர மீட்டரில் 33 செடிகளை பராமரிக்க முடியும்.பாஸ்போ பாக்டீரியா மற்றும் நீர் நிர்வாகம்: உளுந்து சாகுபடி முறையில் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வதால் மணிசத்தை பாஸ்போ பாக்டீரிய நுண்ணுயிர்களை அதிகரித்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்க செய்கிறது.

இதனால் ரசாயன உர செலவுகளை குறைத்து மகசூலை அதிகரிக்க உதவுகிறது. உளுந்து சாகுபடியை பொறுத்தவரை அதிக மகசூல் பெறுவதற்கு 2 சதவீதம் டிஏபி கரைசலான 5 கிலோ டிஏபி கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி தெளிந்த கரைசலை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் தெளிக்கும் போது வயலில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும். இந்த முறையை 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் இடைவெளி விட்டு மறுமுறை தெளிக்க வேண்டும். மேலும் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை உடனே களைதல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறைகள்: உளுந்து சாகுபடியை பொறுத்தவரை பயிர் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கிடைபிடிக்க வேண்டும். உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்படி முறைகளில் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து சாகுபடியை செய்தால் குறைவான செலவுகளில் அதிகமான மகசூலை பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Uludu ,Kadavur ,Thokaimalai , Thokaimalai: Pioneer Farmers New Business for Uruum Cultivation Farmers in Kadavur and Thokaimalai Regions
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி