×

குன்னூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படுமா?

*இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குன்னூர் : குன்னூரில் ஆறு, ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ள தனியார் மீது தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்ரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரண்டு மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல் தலையீடு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றினை ஆக்ரமித்து நான்கு முதல் ஐந்து மாடிகள் வரை கட்டிடங்கள் கட்டப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையால் ஆக்ரமிப்புகள் காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள நீர் புகுந்து குன்னூர் நகரமே கடும் பாதிப்புக்குள்ளானது. தன்னார்வலர்கள் இணைந்து குன்னூர் ஆற்றினை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குன்னூர் பகுதியில் உள்ள மக்கள் விதிமுறைகளை மீறி ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குன்னூரில் அனுமதி வாங்கி கட்டப்படும் கட்டிடங்கள் கூட 17 மீட்டருக்கு மேல் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு அமலில் உள்ளது, இருந்த போதிலும்  விதிமீறி கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஓடைகள், ஆறுகள், கால்வாய் போன்ற வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூரில் 3வது வார்டு எம்ஜிஆர் நகர், 20வது வார்டு மாடல் ஹவுஸ், 25வது வார்டு ராஜாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அரசு இடங்களை ஆக்கிரமித்தும், விதிகள் மீறியும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது’’ என குற்றம்சாட்டினர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. எனவே இதுபோன்று மெத்தனமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டக்கூடாது என விதிமுறைகள் இருந்தும் நான்கு முதல் ஐந்து மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்படுகிறது. மேலும் முக்கிய ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவதால் அதிக மழைப்பொழிவு காலங்களில் மண் சரிவு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.  

இந்நிலை தொடர்ந்தால் வரலாறு காணாத மழைப்பொழிவு காலங்களில் பேரழிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும், நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : kunnur , Coonoor: The Tamil Nadu government is concerned about private individuals who have built buildings encroaching on water bodies including rivers and streams in Coonoor.
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...