×

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வே துறை விளக்கம்

சென்னை: ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை என அறிவித்துள்ளது. ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே விசாரணையில் அபாய சங்கிலி சரிவர இயங்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர். கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியதாக நடத்திய ஆய்வில் அறிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில், உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையே சென்றுகொண்டிருந்த போது ஏழு மாத கர்ப்பிணி தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யாததால் பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் 8 கி.மீ தள்ளி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்த போது அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று கர்ப்பிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உளுந்துர்பேட்டையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இறந்து கிடந்த கர்ப்பிணியின் உடலை மீட்டனர்.

பின்னர் ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே ஆர்டிஓ விசாரணையை தொடங்கியது. இன்று அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என குற்றசாட்டு எழுந்த நிலையில் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

அதில் ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை. ரயில்வே விசாரணையில் அபாய சங்கிலி சரிவர இயங்கியதாகவும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

The post ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வே துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Railway Department ,Chennai ,HAZARD CHAIN ,Dinakaran ,
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...